கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலுள்ள முன்னணி அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்தும் அந்தப் போட்டி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து இரண்டு அணிகளை நீக்கி, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு உத்தரவிட்ட ஒருநாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
எனினும் இந்தப் போட்டிக்கு மக்களிடையே போதிய ஆதரவு இல்லாத காரணத்தாலேயே அது கைவிடப்படுவதாக போட்டியை நடத்தும் மூன்று நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்தியக் கிரிக்கெட் வாரியம் இன்று-புதன்கிழமை வெளியிட்டது.
இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்களிடையே பெரிய ஆதரவு இருந்ததன் காரணமாகவே, இந்த சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டி தொடங்கப்பட்டது.
இருந்தபோதும், இப்போட்டியை நேரடியாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்ததே அது கைவிடப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் கிரிக்கெட் விமர்சகர் ஆர் மோகன்.
ஆனால் ஐ.பி.எல். போட்டிகள் வெற்றிபெற்றாலும் டி - 20 ஏன் தோல்வியடைந்தது புரியாத புதிராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளை இந்த அனைத்துப் போட்டிகளும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, அதன் வளர்ச்சியை முன்னெடுப்பதை விட, வர்த்தக நோக்கிலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்பது யதார்த்தமான உண்மை எனவும் மோகன் கூறினார்.

No comments
Post a Comment