எமது வேட்பாளர்கள் மீது அதிருப்தி இருக்குமானால் கட்சிக்கு மட்டும் வாக்களியுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4500 வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் ஒரு தமிழரும் நான்கு முஸ்லிம்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். மாறாக 10 ஆயிரம் வாக்குகளை நாம் இன்னும் பெற்றிருந்தால் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்போம். எனவே தமிழ் மக்கள் இதனை நன்கு சிந்தித்து எதிர்வரும் தேர்தலில் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொல்லன் உலை நரசிங்க வைரவர் ஆலயத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் பேசியதாவது,
தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுமானால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து ஏற்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதம் தமிழர்களும் 24.1 வீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றோம். இந்த விகிதாசாரத்தின் படி நான்கு தமிழ் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் தெரிவாக வேண்டும்.
2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இந்த அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டோம். ஆனால் 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் எமது பிரதிநிதித்துவம் மூன்றாகக் குறைந்தது. இது ஏன்? எமது வாக்குகள் பேரினவாதிகளுக்கு சென்றதால்தான் என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும்.

No comments
Post a Comment