Latest News

August 01, 2015

விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்-இரா. சம்பந்தன்
by Unknown - 0

நாடாளுமன்றத்தில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற வட மாகாண முதல்வரின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லையென்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், "கூட்டமைப்பினர் என்னை வட மாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர்களது தேர்தல் களங்களில் அக்கட்சி வேட்பாளர்களுக்காக பேசுவது எனக்கு அழகல்ல" என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார்.

போருக்குப் பின்னரான புனர் நிர்மாண நடவடிக்கைகள் மக்களின் தேவைகளை அனுசரித்து நடத்தப்படாமல் தான் தோன்றித்தனமாக நடைபெற்றுவருவது மனவருத்தத்தைத் தருவதாகவும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசியல் ரீதியான தீர்வுகள் கிடைக்கும் வரை, எந்தக் காலத்திலும் அமைச்சரவைப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே தனது கருத்து என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அப்படி அமைச்சரவைப் பதவியை ஏற்றுக் கொண்டால், கூட்டுப் பொறுப்பு என்ற வகையில் அமைச்சர்கள் சுதந்திரம் இழந்து, மக்களின் எதிர்பார்ப்பைக் கைவிட வேண்டிவரும் என்றும் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் விருப்ப வாக்குகளை அளிக்க வேண்டியிருக்கும். பிரச்சாரம் செய்தால் விருப்ப வாக்குகளை யாருக்கு அளிப்பது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் விக்னேஸ்வரம் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக விக்னேஸ்வரன் தன்னிடம் பேசவில்லையென்றும், தேர்தலுக்குப் பிறகு இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments