பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள் கடந்த 27.06.2015 சனிக்கிழமை மற்றும் 28.06.2015 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்த நிலையில் அதன் இறுதிப்போட்டிகள் கடந்த 04.07.2015 சனிக்கிழமை CENTRE SPORTIF NELSON MANDELA AVENUE PAUL LANGEVIN 95200 SARCELLES பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
காலை 9 மணியளவில் ஆரம்ப நிகழ்வாக முழவு இசையணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் திரு.பாலசுந்தரம் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தனேந்திரன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சுக் கொடியினை சார்சல் மாநகர விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. பாஸ்குப்தா அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை ஓள்னேசுபுவா தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகக் கொடியினை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமாரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கொடியை அதன் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
சமநேரத்தில் இல்லங்களின் தலைவர்கள் இல்லக் கொடிகளை ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் சுடரினை தமிழர் இல்லமெய்வல்லுநர் போட்டி முகாமையாள திரு.இராஜலிங்கம் அவர்களிடமிருந்து 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரன் செல்வன் சிறிதரன் ஜனகரன், சிறந்த விளையாட்டு வீராங்கனை செல்வி சோதிராசா சோபிகா ஆகியோர் பெற்று வீரர்களுடன் மைதானத்தைச் சுற்றிவந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.
வீரர்களுக்கான உறுதிப்பிரமாணத்தைத் தொடர்ந்து நடுவர்களுக்கான உறுதிப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதமவிருந்தினர் பாஸ்குப்பதா அவர்கள் போட்டிகளை ஆரம்பித்துவைத்து உரைநிகழ்த்தினார்.
பிரதம விருந்தினர்கள், பிரமுகர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்க, சீரான கட்டளை பின்பற்றி முழவு வாத்திய அணிவகுப்பைப் பின்தொடர்ந்து இல்ல மாணவர்களின் அணிநடை மைதானத்தை வலம்வந்தது. இது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
சாள்ஸ் இல்லம்(பச்சை), ராதா இல்லம்(மஞ்சள்), மாலதி இல்லம்(செம்மஞ்சள்), அங்கயற்கண்ணி இல்லம் (நீலம்), ஜெயந்தன் இல்லம்(ஊதா), சோதியா இல்லம் (சிவப்பு) ஆகிய இல்லங்களுக்கிடையில் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றதுடன் இல்லங்களும் தாயகத்துக்கு எம்மை அழைத்துச்செல்வது போன்று சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் விநோத உடை நிகழ்விலும் மாணவர்கள் சிறப்பாகப் பங்குபற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
1230 மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தனர். ராதா இல்லம் (538.5), சாள்ஸ் இல்லம்(418.5), அங்கயற்கண்ணி இல்லம் (350) ஆகிய இல்லங்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துக்கொண்டன.
சிறுவர்கள், பழைய மாணவர்கள், பார்வையாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருக்கும் போட்டிகள் குறைவின்றி இடம்பெற்றிருந்தன.
நிகழ்வின் நிறைவாக விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்களால் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், பதக்கங்களும் அணிவித்துவைக்கப்பட்டன.
கொடிகள் இறக்கிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரவு 8.30 மணியளவில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுகண்டன.
செல்வதீபன்
No comments
Post a Comment