Latest News

June 03, 2015

வாகரை மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by Unknown - 0

யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ள போதும் வாகரை மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இராணுவம் கையகப்படுத்திய காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி மட்டக்களப்பு வாகரை முருக்கையடிமுனை கிராம மக்கள் நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் காணிகளை இராணுவத்தினர் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவற்றை மீளக் கையளிக்குமாறு கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

வாகரைப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டில் யுத்த நவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள் 2007ஆம் ஆண்டில் மீள்குடியேறச் சென்றபோது தமது கிராமத்தை இராணுவம் ஆக்கிரமித்திருந்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 8 வருடங்களாக தமது கிராமத்தை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கும் முருக்கையடிமுனை கிராம மக்கள் இதனால் தமது வாழ்விலும் பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

கடற்றொழில், விவசாயம் என பலதரப்பட்ட தொழில்களிலும் ஈடுபடத்தக்க வளமான கிராமத்தை அபகரித்துவிட்டு குடியிருக்க பொருத்தமற்ற ஊரியன்கட்டுவில் தம்மை குடியேற்றியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இதனால் சுமார் 50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ். இராகுலநாயகியிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக் கட்சியின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராணுவத்தினர் மக்கள் குடியிருப்பில் இருந்து விலகிச்செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.



« PREV
NEXT »

No comments