யுத்தத்தின் போது கணவரை இழந்த பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது அல்லலுறும் பெண்கள், சிலரின் பாலியல் இச்சைகளுக்கு இணங்க வற்புறுத்தப்படுவதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமது இன சமூகத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.மற்றுமொரு தரப்பினர் தம்மை அபசகுனத்தின் அடையாளமாக ஓரம்கட்டி ஒதுக்குவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
2009ம் ஆண்டு ஆயுத ரீதியான யுத்தம் நிறைவடைந்தாலும், சமூக யுத்தம் தொடர்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளனர். இளம் கணவரை இழந்த பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டு வன்முறைகளும் அதிகளவில் இடம்பெற்று வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத சமூக சேவகியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜீவனோபாய வழிகளை தேடிக் கொள்வதில் காணப்படும் நெருக்கடி நிலைமை காரணமாக, சில கணவரை இழந்த பெண்கள் பாலியல் தொழிலை தெரிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக மற்றுமொரு சமூக சேவையாளர் தர்சனி சந்திரன் தெரிவித்துள்ளார்.
கணவரை இழந்த பெண்களுக்கு இந்த சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆண்கள் பாலியல் ரீதியான இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள முனைவதாகவும், பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாகவும் மற்றுமொரு கணவரை இழந்த பெண் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் குடும்ப நண்பர்கள் கூட பண மற்றும் ஏனைய உதவிகளுக்கு கைமாறாக பாலியல் இச்சைகளுக்கு இணங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 27000 கணவரை இழந்த பெண்கள் வீட்டுத் தலைமைப் பொறுப்பினை ஏற்று செயற்பட்டு வருகின்றனர் என உத்தியோகபூர்வ புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments
Post a Comment