சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வெற்றிபெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி. மகேந்திரனைவிட அவர் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றார்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டார்.
தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
இடதுசாரிக் கட்சிகளின் சார்பில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி. மகேந்திரன் போட்டியிட்டார்.
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் துவங்கியது.
16 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 1,60,432 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
சி. மகேந்திரன் 9,710 வாக்குகளையும் டிராஃபிக் ராமசாமி 4590 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
ஜெயலலிதாவைத் தவிர போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்கள் காப்புத் தொகையை இழந்தனர்.
இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதாவுக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத் தேர்தல் நடைபெற்றிருப்பதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றிருந்தாலும் ஜனநாயகம் தோற்றுவிட்டது என சி. மகேந்திரன் கூறியுள்ளார்.
இன்று மாலையே, சபாநாயகர் முன்னிலையில் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments
Post a Comment