இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களின் ஆட்சி அல்ல. எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'இன்று ஆட்சி செய்பவர்கள் கட்சியின் தலைவர்கள் தங்களது ஆட்சியில் மந்திரிப் பதவிகளை வைகிக்க வேண்டுமென கேட்டார்கள். நாம் பெற்று இருக்கலாம். அதனால் நன்மைகள் கிடைத்திருக்கலாம்.ஆனால் நாங்கள் அந்தநிலைக்கு போக விரும்பவில்லை. பதவிக்காகவும் மந்திரிப் பதவிகளுக்காகவும் நாம் உங்களை வாக்களிக்கச் சொல்லவில்லை.
எமக்கு பதவிகள் முக்கியம் அல்ல. எமது இலக்கு வேறு. இந்த அரசு முக்கியமாக தமிழ் மக்களின் வாக்குகளுடன், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் வாக்குகளால் உறுதிப்படுத்தப்பட்ட ஆட்சி. இவர்கள் நூறு நாள்; வேலைத்திட்டத்துடன் ஆட்சிக்கு வந்தார்கள். இதில் ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலங்களை உரிய மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது முக்கியமான விடயமாக இருந்தது. தற்போது இது ஓரளவு இடம்பெற்று வருகின்றது. இருப்பினும், நீங்கள் எதற்காக வாக்களித்தீர்களோ, அந்த நோக்கங்கள் நிறைவு பெறவில்லை. அந்த நோக்கங்கள் கிடைக்கும்வரை நாம் பதவிகளை விரும்பமாட்டோம்' என்றார்.
இந்த மக்கள் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, கிழக்கு மாகாணசபை விவசாய கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன், டி.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திகாந்தன,; திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் வி.புவிதராஜன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments
Post a Comment