சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு போடுவதாக எழுந்த புகார்களைத் தவிர அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு நடந்தது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரன், டிராபிக் ராமசாமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே நகர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர், தேர்தல் நடத்தும் அலுவலர் சவுரி ராஜன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளியில் 12 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு இரண்டு மையங்களில் வாக்குப்பதிவு மையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.
அமைதியான வாக்குப்பதிவு
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 4 மணிவரை 63.5 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் அவர் கூறினார். 230 வாக்குச்சாவடிகளில் ஒரு இடத்தில் கூட கலவரமோ, அடிதடியோ நடைபெறவில்லை அமைதியாக மக்கள் ஓட்டளித்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கள்ள ஓட்டு புகார்
அதேநேரத்தில் அதிக அளவில் கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். தங்களின் புகாரை ஏற்ற மறுத்த காரணத்தால் கம்யூனிஸ்ட் முகவர்கள் வாக்குச்சாவடிகளை விட்டு வெளி நடப்பு செய்தனர்.
கூட்டம் கூட்டமாக
அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக வந்து கள்ள ஓட்டு போடுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜனிடம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரன் புகார் தெரிவித்தார். கள்ள ஓட்டு பதிவாவதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 147-வது சாவடியில் 200 பேர் வாக்களித்த நிலையில் ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்கும் நிலையில்தான் ஜெயலலிதா இருக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

No comments
Post a Comment