Latest News

June 07, 2015

தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளை மறைக்க வடக்கில் சதித்திட்டம்!
by Unknown - 0

வடக்கு மாகாணத்தில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களை அதிகரிக்கச் செய்து தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளை மறைப்பதற்கு மறைமுகமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு ,கிழக்கு இணைப்பாளர் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன்  தெரிவித்தார்.    

வடபகுதியில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ். இன்பம் தலைமையில் இடம்பெற்றது.   

அதில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலங்களில் அரசியல் தீர்வு , மீள்குடியேற்றம் , கைதிகள் விடுதலை என்பன குறித்து போராட்டங்களை மேற்கொண்டதுடன் அதற்கான பேச்சுகளிலும் ஈடுபட்டுவந்தோம் ஆனால் தற்போது பாலியல் வன்கொடுமை , வாள்வெட்டு என பேசுவதுடன் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றது. இவற்றுக்கு நாங்களும் ஆதரவு வழங்குகின்றோம். ஆனாலும் எம்மிடமுள்ள பாரிய அடிப்படைப்பிரச்சினைகள் இவற்றால் மறைந்துவிடுகின்றன. இவ்வாறு மறைப்படுவதற்கு மறைமுக சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன .

இங்குள்ள ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினரை குறையுங்கள் அல்லது முற்றாக அகற்றுங்கள் என்று நாங்கள் கோருமிடத்து இங்கு பல சமூகப்பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இவை திட்டமிட்டு இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். அத்துடன் வித்தியாவின்  கொலையின் பின்னர் இடம்பெற்ற செயற்பாட்டினால் மீண்டும் வடக்கில் விடுதலைப்புலிகள் உருவாக்கம் பெற்றுவிட்டனர் என தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஆன்மீக வாதிகளும் வதந்தியை பரப்பி அங்குள்ள மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி விட்டுள்ளனர். அத்துடன் வலி.வடக்கு பகுதியில் புலிகளிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகள் தற்போது மைத்திரிபாலவினால் மீண்டும் அவர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றது என்ற மாயையினையும் தெற்கு மக்களிடம் பரப்பியுள்ளனர். 

இன்று ஆட்சிமாறினாலும் அராஜக ஆட்சியாளர்களின் ஆட்கள் இன்னும் மாறவில்லை. கடந்த காலங்களில் எவ்வாறு புலாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் இருந்ததோ அதே போலவே இன்றும் உள்ளது.    மேலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒரு குடையின் கீழ் செயற்பட வேண்டும் . எனவே வடக்கிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் அரசியல் கலப்பில்லாது இயங்க வேண்டும். அவ்வாறான சூழலில் அனைத்து அமைப்புக்களையும்  இணைத்து ஒன்றாக போராடி நாம் எமது இலக்கை அடைவோம். எனவே குறித்த விடயங்களை செயற்படுத்துவதற்கு ஜெயக்குமார் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்க்பபட்டுள்ளது. அதற்கமைய எமது செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும்  அவர் மேலும் தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments