இன்று உதயமாகும் தமிழ் முற்போக்கு கூட்டணி, காலத்தின் பணிப்பை பூர்த்தி செய்து நாட்டின் அரசியல் பரப்பில் புதிய வரலாற்றை படைக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மலையக தலைமைகள் ஒன்றிணைந்து புதிதாக உருவாக்கியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை (03) கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது கூட்டணி மத்திய மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம் போன்ற மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை, அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக செயற்படும்.
இந்த அனைத்து மாவட்டங்களிலும் நமது கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத இடங்களில் நமது அரசியல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் 15 இலட்சம் தமிழர்களை, தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் நமது தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யவுள்ளது.
இந்த கூட்டணி, மலையகத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கூட்டணியாக, பரவலாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டது. எமது கூட்டணிக்குள்ளே மலையக மூச்சு இருக்கின்றது. மலையக உயிரோட்டம் இருக்கின்றது. மலையக தேசியம் இருக்கின்றது. ஆனால், இந்த கூட்டணி மலையகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்று அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்டங்களில் வாழும் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெருந்தொகை மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்கின்றது.
நமது இரண்டு கூட்டு அமைப்புகளுக்கு இடையில், பிரிபடாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவது என்ற இலக்கு தொடர்பில் ஒரு புரிந்துணர்வு இயல்பாகவே ஏற்படுமென நாம் எதிர்பார்கின்றோம். நமது கூட்டணி சமூக முன்னோடிகளை அடக்கிய ஆலோசனை சபை ஒன்றை அமைக்கும். கட்சிகளின் நேரடி சார்பு அற்ற சிந்தனையாளர்கள் இந்த சபையில் அங்கம் வகிக்கும்படி அழைக்கப்படுவார்கள். இந்த சபை கூட்டணிக்கு வழி கட்டும் சபையாக செயற்படும் என்று அவர் கூறினார்.
வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை, பிரிபடா இலங்கை என்ற ஒரே நாட்டு வரையறைக்குள் நின்று நாம் முன் வைப்போம். மலையக தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளையே பொதுவாக நமது மக்களின் அரசியல் கோரிக்கைகளாக கருதும் சிந்தனை பொதுவாக நிலவுகிறது. இதை நாம் மாற்றுவோம்.
மலையக தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளை எமது இந்த கூட்டணி அரசியல் பலத்துடன் நாம் உரிய தொழிற்சங்க தளத்தில் சந்திக்கும். அதேவேளை எமது மக்களின் அரசியல் கோரிக்கைகளை நாம், எமது கூட்டணியின் தலைமையின் பங்குபற்றலுடன் நமது பொது செயலாளர் அந்தனி லோரன்ஸ் தலைமையில் அமைக்கப்படும் குழு ஆய்வு செய்து ஆலோசனை சபையின் ஒத்துழைப்புடன் உரிய தேசிய, சர்வதேசிய அரங்குகளில் வெளிப்படுத்தும் என்றார்.
No comments
Post a Comment