Latest News

June 22, 2015

வசூலில் சாதனை படைக்கும் ஜுராஸிக் வேர்ல்ட் மற்றும் இன்ஸைட் அவுட்!
by Unknown - 0

சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியான ஜுராஸிக் வேர்ல்ட் திரைப்படம் அமெரிக்காவில் வசூல் சாதனைகளைப் படைத்துவருகிறது. பிக்ஸார் ஸ்டுடியோஸ் தயாரித்த இன்ஸைட் அவுட் திரைப்படம் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஜுராஸிக் வேர்ல்ட் திரைப்படம் இரண்டு வார இறுதிகளில் 102 மில்லியன் டாலர்களைக் குவித்திருக்கிறது. இதற்கு முன்பாக அவெஞ்சர் திரைப்படம் 100 மில்லியன் டாலர்களைக் குவித்தது.

ஒரு சிறுமியை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமான இன்ஸைட் அவுட் 91 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது.

தொடராக வரும் திரைப்படங்களைத் தாண்டி, தனியாக வெளிவரும் ஒரு திரைப்படம் வார இறுதியில் இவ்வளவு வசூலித்தது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பாக 2009ஆம் ஆண்டில் அவதார் திரைப்படம் 77 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

பிக்ஸார் ஸ்டுடியோ 1995ல் தயாரித்து வெளியிட்ட டாய் ஸ்டோரி திரைப்படத்தில் துவங்கி, அந்நிறுவனம் தயாரித்த 14 படங்களுமே ரிலீஸானபோது முதலிடத்தில்தான் இருந்திருக்கின்றன. இன்ஸைட் அவுட் மட்டுமே இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

"வேறு ஏதாவது வாரமாக இருந்தால் இன்ஸைட் அவுட் முதலிடத்தில் இருந்திருக்கும். ஆனால், அது ஒரு பெரிய விஷயமில்லை. முதலாம் இடத்தில் இருப்பதற்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" என பாக்ஸ்ஆஃபிஸ் டாட்காமின் துணைத் தலைவர் ஃபில் காண்ட்ரியோ குறிப்பிடுகிறார்.

ஃப்ரோஸன் திரைப்படமும் இரண்டாவது இடத்தைத்தான் பிடித்தது. ஆனால், டிஸ்னி வெளியிட்ட திரைப்படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த திரைப்படமாக ஃப்ரோஸன் சாதனை படைத்தது. ஒட்டுமொத்தமாக 1.3 பில்லியன் டாலர்களை அந்தப் படம் வசூலித்தது.

இதற்கிடையில், ஜுராஸிக் வேர்ல்ட் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. அதாவது, டினோசர் திரைப்படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த திரைப்படமாக இந்தப் படம் உருவெடுத்திருக்கிறது.

இரண்டு வாரங்களில் இந்தப் படம் 398 மில்லியன் டாலர்களைக் குவித்திருக்கிறது. 1993ல் வெளியான திரைப்படம் இரு வாரங்களில் 357 மில்லியன் டாலர்களையே வசூலித்தது.
« PREV
NEXT »

No comments