Latest News

June 15, 2015

சந்தேக நபர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை-புங்குடுதீவு
by Unknown - 0

இலங்கையின் யாழ்ப்பாணம் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் புங்குடுதீவு மாணவி வித்யாவின் கூட்டு வன்புணர்வு கொலை வழக்கின் மரண விசாரணை திங்களன்று நடைபெற்றபோது, சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் ஒரு மாதத்திற்குத் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிபதி லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்பதுபேரையும் பயங்கராவதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒரு மாத காலத்திற்குத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான எழுத்து மூலமான அனுமதியை சட்டமாஅதிபர் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து பெற்று, ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததையடுத்தே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் ஜுலை மாதம் 13ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிமன்றத்தல் வாதாடிய சட்டதரணி தவரசா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இன்றைய மரண விசாரணையின்போது கொல்லப்பட்டவரான வித்யாவின் தாயாரும், சகோதரனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, மிகவும் மனஉளைச்சலுக்குள்ளான நிலையில் துயரத்துடன் காணப்பட்டனர். இருவருமே ஒருகட்டத்தில் மயங்கி சரிந்தனர்.

இதனையடுத்து மயக்கம் தெளிவிக்கப்பட்ட தாயாரை, சாட்சிக்கூண்டில் இருந்து அழைத்து நாற்காலியொன்றில் அமர்ந்து சாட்சியமளிப்பதற்கு நீதிபதி அனுமதித்திருந்தார். அப்போதும், அவர் மிகுந்த சிரமத்தோடே சாட்சியமளித்தார்.

கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த வித்யாவின் உடலை நேரடியாகக் கண்டிருந்த அவருடைய சகோதரன் சாட்சியமளித்தபோது, அதனை விவரிக்குமாறு நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. தனது சாட்சியமளித்தலின்போது அவர் மயக்கமடைந்து சரிந்தார். அதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டாhர்.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கொழும்பில் இருந்து வந்ததாக கூறப்படும் மூன்று சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்து விசாரணைகளை அவதானித்ததாகவும், அவர்கள் இந்த வழக்கில் யாருடைய சார்பில் ஆஜராவதற்காக வந்தீர்கள் என கேட்டபோது, அவர்கள் அதற்குப் பதிலளிக்காமல் மௌனம் சாதித்ததாகவும், அவர்கள் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து, நீதிமன்றத்தில் அவர்களுடைய பிரசன்னம் குறித்து நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது அவர்கள் அங்கிருந்து மாயமாகியிருந்ததாகவும் தவராசா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த சட்டத்தரணிகளின் நடவடிக்கை மர்மமாகவும் சந்தேகத்திற்கு இடமாகவும் இருந்தது என தெரிவித்த தவராசா, இவர்களை அரசியல்வாதியொருவர் நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து அழைத்துச் சென்றதாகப் பின்னர் தனக்கு தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையையொட்டி ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் மற்றும் கலகம் அடக்கும் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
« PREV
NEXT »

No comments