உத்திரப்பிரதேசத்தில் மாங்காய் பறிப்பது தொடர்பாக நடந்த சண்டையில் 17 வயது சிறுமி ஒருவர் உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் கீஷண். இங்குள்ள விவசாயி சிவ்பூஷனின் தோட்டத்தில் மாங்காய்கள் அதிகம் காய்த்திருந்தது.
கடந்த வாரம் இவரது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் சிலர், மாங்காய் தோட்டத்துக்குள் புகுந்து மாங்காய்களை பறித்துள்ளனர். இதற்கு சிவ்பூஷண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாங்காய் திருடும் கும்பல் தோட்டத்தை விட்டு வெளியேறியது. இந்நிலையில் சிவ்பூஷனின் தோட்டத்துக்குள் மாங்காய் பறித்த கும்பல் மீண்டும் நுழைந்தது, அப்போது சிவ்பூஷண் வயலில் வேலை செய்துகொண்டிருக்க, அவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல், அங்கிருந்த சிறுமியை முரட்டுத்தனமாக தாக்கியதுடன், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிவ்பூஷன் பொலிஸில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து நான்கு பேர் கொண்ட கும்பல் மீது கொலை வழக்குப் பதிவு செய்த பொலிஸார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் காரணமாக அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுவதுடன் ஏராளமான பொலிஸார் அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments
Post a Comment