புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவழைப்பது நாட்டிற்கு அச்சுறுத்தலாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போராடி வென்றெடுத்த சமாதானத்தை மீண்டும் பிரிவினைவாதிகளின் கைகளில் கொடுக்கவே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை லண்டன் மாநாட்டிலும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது எனவும் அவர் குற்றம் சமத்தியுள்ளார்.
புலம்பெயர் அமைப்புகளுடனும் புலி அமைப்புகளுடனும் லண்டனில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை முக்கிய பங்கினை வகித்துள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் செயலாளரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு என்னவென்பது தெளிவாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேசத்தின் தேவைக்கும் புலம்பெயர் புலிகளின் தேவைக்கும் அமையவே நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டை தாம் ஆரம்பத்தில் இருந்தே முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இப்போது இவர்களின் உண்மை நிலைமை என்னவென்பது வெளிச்சத்துக்கு வருகின்றது. இந்த அரசாங்கம் வடக்கில் பிரிவினை வாதிகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டுவருவதாகவும் கூறினார்.
இன்னும் சிறிதுகாலத்தில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்குமானால் மீண்டும் ஈழத்துக்கான அடித்தளம் இடப்படும் என்றும்
உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.
No comments
Post a Comment