01-06-2015 முதல் இந்த கேள்வி உலகுதழுவிய அளவில் பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. காரணம் திங்களன்று வெளியிடப்பட்ட பிரிட்டன் ஆய்வின் முடிவுகள் அப்படி ஒரு நம்பிக்கை கலந்த கேள்வியை தோற்றுவித்துள்ளது.
புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் முற்றிய தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக கூறும் பிரிட்டனின் ஆய்வறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஒரு வழியாக புற்றுநோயை மனிதன் வெற்றிகொண்டுவிட்டனா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கான அவசரமான சுருக்கமான பதில் இன்னும் இல்லை என்பதே என்கிறார் பிபிசி இணையதளத்தின் சுகாதார பிரிவின் ஆசிரியர் ஜேம்ஸ் கல்லஹர்.
“இறுதி வெற்றியல்ல; உற்சாகமளிக்கும் முன்னேற்றமே”
அதேசமயம், இந்த மருந்து மிகப்பெரிய உற்சாகமளிக்கும் முன்னேற்றம் என்றும் அவர் கூறுகிறார். குறிப்பாக புற்றுநோயை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த இதுவரை இருக்கும் ரேடியோ தெரபி, கீமோ தெரபி, அறுவை சிகிச்சை ஆகிய மூன்று முக்கிய சிகிச்சை முறைகளோடு இம்யூனோ தெரபி என்கிற நான்காவது வலுவான சிகிச்சைமுறையின் முக்கிய முன்னேற்றமாக இந்த கண்டுபிடிப்பு பார்க்கப்படவேண்டும் என்கிறா ஜேம்ஸ் கல்லஹர்.
பிரிட்டன் ஆய்வின் முடிவுகள் எல்லா புற்றுநோய்களையும் முழுமையாக குணப்படுத்தவல்லதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் புற்றுநோய்க்கு எதிரான மனிதர்களின் வலுவான சிகிச்சைமுறையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் immune system என்று அழைக்கப்படும் உடல் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பு என்பதுதான் மனித உடலின் இயற்கையான உள்ளக பாதுகாப்புக் கவசமாக இருந்து, மனித உடலுக்குள் வரும் அந்நியக் கிருமிகள் உள்ளிட்ட அனைத்தையும் அழித்து உடலை தொடர்ந்து பாதுகாக்கும் வேலையை செய்கிறது.
இந்த நோய் எதிர்ப்பு கட்டமைப்புக்குள் பல்வேறு சுய பாதுகாப்பு தடுப்புக்களும் உண்டு. காரணம் உடலின் ஆரோக்கியமான திசுக்களை இந்த நோய் எதிர்ப்புக் கட்டமைப்பானது தவறுதலாக அழித்துவிடாமல் தடுப்பதற்கான இயற்கைத் தடுப்பும் இந்த கட்டமைப்புக்குள்ளேயே இருக்கிறது.
நோய்எதிர்ப்புக் கட்டமைப்பை ஏமாற்றும் கெட்டிக்காரத் திருடன்
புற்றுநோய் என்பது அடிப்படையில் உடலின் நோய் பாதித்த திசு. ஆனால் அது தன்னை ஆரோக்கியமான திசு என்று வெளியில் காட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. அதாவது ஒரு கூட்டத்தில் திருடிவிட்டு ஓடுபவன், “அதோ அங்கே திருடன் ஓடுகிறான் பிடியுங்கள்” என்று கூறித்தப்பிக்கும் கைதேர்ந்த திருடனைப் போல, இந்த புற்றுநோய் திசுக்கள் தம்மை நல்ல திசு என்று உடலின் நோய் எதிர்ப்புக்கட்டமைப்பை ஏமாற்றும் திறன் வாய்ந்தவை. அவற்றின் வெளித்தோற்றத்தை கண்டு ஏமாறும் உடலின் நோய் எதிர்ப்புக்கட்டமைப்பு இந்த புற்றுநோய் திசுக்களை அழிக்காமல் விட்டுவிடுகின்றன. அவை வளர்ந்து புற்றுநோயாக முற்றுகிறது.
இந்த ஏமாற்றும் வேலையை புற்றுநோய் செல்கள் எப்படி செய்கின்றன?
இந்த புற்றுநோய்த் திசுக்கள், தாம் சுரக்கும் ஒருவித புரதத்தின் மூலம் உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்புடன் வேதியியல் ரீதியில் உரையாடுகிறது. அந்த உரையாடல் மூலம் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பு தன்னை அழித்துவிடாமல் புற்றுநோய் திசுக்கள் பார்த்துக்கொள்கின்றன.
புதிய கூட்டுமருந்து எப்படி செயல்படுகிறது?
இந்த பின்னணியில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டு மருந்தானது, புற்றுநோய் திசுக்கள் சுரக்கும் புரதங்களுக்கும், உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்புக்கும் இடையில் நிகழும் வேதியியல் உரையாடல் நிகழாமல் தடுத்து விடுகிறது.
இம்யுனோ தெரபி, அதாவது நோய் எதிர்ப்புக்கட்டமைப்பை வலுப்படுத்தும் சிகிச்சைமுறையின் ஒரு அங்கமாகவே இந்த கூட்டு மருந்து உருவாக்கப் பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் துறை வளர்ந்து வருகிறது.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே போன்ற வேறொரு நோய் எதிர்ப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் மருந்து நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை இரண்டு மடங்காக அதிகரிக்கச் செய்வதாக மற்றொரு ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன.
இதேபோல வேறு சிறிய அளவிலான முயற்சிகளும் கூட இந்த இம்முனோ தெரபி மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்களை குணப்படுத்த இயலும் என்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து வருகின்றன.
புதிய மருந்தின் போதாமை என்ன?
இந்த புதிய கூட்டு மருந்து புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
முதல் காரணம் இந்த மருந்துகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்களைத் தருவதில்லை. சிலருக்கு மிக நல்ல முறையில் பலன் தருகிறது. சிலருக்கு சுமாராக பலன் தருகிறது. வேறு சிலருக்கோ எந்த பலனையும் தர மறுக்கிறது. இந்த வேறுபாடு ஏன் என்பதற்கான காரணம் மருத்துவ ஆய்வாளர்களுக்கு இன்னமும் விளங்கவில்லை. எனவே இந்த மருந்துகள் கூடுதல் விலையுள்ளதாக இருக்கும் என்பதால் யாருக்கு இவை பயன்படும் என்பதை அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.
இரண்டாவதாக இந்த மருந்துகளின் நீண்டகால பக்கவிளைவுகள் என்னவாக இருக்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. முக்கியமாக, உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை இந்த மருந்துகள் மாற்றி அமைப்பதால், எதிர்காலத்தில் வேறு வகையான புதிய நோய்கள் தோன்றும் ஆபத்து இருக்கிறதா என்கிற அதிமுக்கிய கேள்விக்கான பதில் மருத்துவர்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.
இதையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது எதிர்காலத்தில் பெரும் நம்பிக்கையளிக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய முன்னேற்றமாக மட்டுமே இதை வர்ணிக்க முடியுமே தவிர, புற்றுநோயை வெற்றி கண்டுவிட்டோம் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது.
அதேசமயம் வெற்றி என்கிற வார்த்தை இல்லாவிட்டால்கூட மருத்துவரீதியில் இதுவே மிகப்பெரிய சாதனை தான்.
No comments
Post a Comment