கனடாவில் தமிழர்களிற்கு குடியுரிமைப் பாதிப்பு ஏற்படும் என்ற தொணிப்பட அண்மையில் வெளிவந்த செய்தியில் கனடாவில் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கனேடிய குடிவரவு அமைச்சர் அடியோடு மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கனேடியத் தமிழ் கண்சவேட்டிவ் அமைப்பு விடுத்த அறிக்கையில், தனது கருத்தைப் பதிவு செய்துள்ள கனேடியக் குடிவரவு அமைச்சர் கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சான்டர் அவர்கள்,
கனேடியப் பிரஜைகள் சகலரும் ஒரே மாதியாகவே நடத்தப்படுகின்றார்கள். கனடியக் குடியுரிமையில் இரண்டாந்தரப் பிரஜாவுரிமை என்று ஒன்றில்லை. இது தொடர்பான செய்திகளை நாங்கள் அடியோடு மறுக்கின்றோம் என்று தெரிவித்துள்ளதோடு,
கனேடியக் குடியுரிமையை இழக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டுள்ள இரட்டைப் பிரஜைகள் யாரென்றால், மேற்படி பிரஜைகள் பயங்கரவாதம் தொடர்பான எந்தச் செயலிலும் ஈடுபடுதல், கனடாவிற்கு எதிராக அல்லது கனேடியப் படைகளிற்கு எதிராகப் போராடுதல் அல்லது உளவு பார்த்தல் அல்லது தேசவிரோதக் குற்றச்செயல்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களேயாகும் எனவும்,
கனேடிய குடியுரிமையைப் பெறுபவர்கள் தொகை என்றுமில்லாவாறு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் 261,000 பேர் கனேடியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்கள். இதுவே இதுவரை காலத்திலும் ஒரு குறித்த ஆண்டில் அதிகம் பேர் குடியுரிமையைப் பெற்ற ஆண்டாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments
Post a Comment