Latest News

June 13, 2015

அவுஸ்திரேலியா இலஞ்சம் கொடுத்ததா என விசாரிக்கவுள்ளது இந்தோனேஷியா
by Unknown - 0


இலங்கையர் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலரை சர்வதேச கடற்பரப்பில் திசைதிருப்பி திமோருக்கு அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தமது நாட்டு படகோட்டிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப் போவதாக இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்கள் பயணித்த படகிலிருந்து வேறு படகுகளில் ஏற்றி தி​சைமாற்றி அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய அதிகாரிகள் இந்தோனேஷிய படகோட்டிகளுக்கு 30 ஆயிரம் டொலர் இலஞ்சம் வழங்கியதாக குறிப்பிட்ட படகில் பயணித்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் BBC உலக சேவைக்கு கூறியிருந்தார்.

இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு தமது நாட்டு படகோட்டிகளுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக இந்தோனேஷிய பொலிஸ் உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் உள்ளிட்ட அந்த படகில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை மற்றும் இந்தோனேஷிய படகோட்டிகளுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் இலஞ்சம் கொடுத்த விடயம் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் அதனை ஆமோதிக்கவோ அல்லது மறுக்கவோ இல்லையென்றும் BBC சுட்டிக்காட்டியுள்ளது.

ஆயினும், அவுஸ்திரேலியாவிற்குள் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுப்பதற்காக தம்மாலான அனைத்தையும் மேற்கொள்வதாக அவுஸ்திரேலியப் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

ஆட்கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு நாடுகளே பணம் கொடுத்து தடுப்பதற்கு மாறாக, அத்தகையவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்டோனியோ கட்டரர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
« PREV
NEXT »

No comments