Latest News

June 03, 2015

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது- நிமல்
by Unknown - 0

அரசாங்கத்தின் அச்சாணி வடமாகாண சபையிடமே உள்ளது.வட மாகாணத்தின் தேவைக்கேற்ப அடிபணிந்தும் அஞ்சியுமே அரசாங்கம் செயற்படுகின்றது. வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூற விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல. யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றவேண்டும் என்ற வகையில் வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கருத்துக்களை முன்வைத்ததாக கடந்த வாரத்தில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்துக்கூறிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை முழுமையாக அழித்துவிட்டதாக குறிப்பிட்டாலும் அவை இலங்கையில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சர்வதேச அளவில் புலிப் பயங்கரவாதம் இன்னமும் பலமாகவே செயற்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மீண்டும் இலங்கையை தாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. இவ்வாறான நிலையில் எமது நாட்டை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். வென்றெடுத்த விடுதலையை மீண்டும் தாரை வாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதுடன் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளளன. அதேபோல் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலிகள் இயக்கத்தின் தலையீடுகள் மீண்டும் வடக்கை ஆக்கிரமிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் முக்கிய பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.

அதேபோல் வடமாகாண முதலமைச்சர் மீண்டும் இனவாத செயற்படுகளை ஆரம்பித்து விட்டார். தடைசெய்யப்பட பயங்கரவாத இயக்கத்தை நினைவுகூர்ந்து வடக்கில் புலிகள் தினத்தை வடமாகாண முதலமைச்சர் தலைமையில் அனுஷ்டிக்கின்றார்கள்.

வடக்கில் சட்டத்துக்கு முரணான வகையில் நீதிமன்ற தடைகளை மீறி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல் வடக்கில் நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பன தாக்கப்பட்டுள்ளன. மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகள் மீண்டும் வடக்கில் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. வடக்கில் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

மக்களின் காணிகளை அம் மக்களுக்கு வழங்கவேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை. ஆனால் மக்களை சாட்டி வடக்கில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. அதேபோல் இந்த அரசாங்கத்தின் ஐந்து மாத காலத்தில் வடக்கில் உள்ள அதிகளவான இராணுவத்தை வெளியேற்றியுள்ளது.

இந்நிலையில் வடக்கில் உள்ள ஒட்டுமொத்த இராணுவத்தையும் வெளியேற்றும் முயற்சியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கொண்டு வருகின்றார். வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரங்களை மாகாண முதலமைச்சர் எடுத்துக் கொள்ளும் நிலைமை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இராணுவத்தை வெளியேற்றக் கூற விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல என்பதை அவர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வட மாகாணத்துக்கு இன்று அரசாங்கம் அடி பணிந்துள்ளது. வடக்கில் மட்டுமே இவர்களின் சேவைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். வடக்கில் இருந்து ஒருபோதும் இராணுவத்தை வெளியேற்றக்கூடாது.

வடக்கில் மக்களின் பாதுகாப்பு இராணுவத்தின் கைகளில் மட்டுமே உள்ளது. அதை மீண்டும் சீரழிக்கக் கூடாது. தொடர்ந்தும் வடக்கில் இராணுவம் பலப்படுத்தவேண்டும் என்பதை நாம் அரசாங்கத்துக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

மேலும் எமது அரசாங்கத்தை மீண்டும் உருவாக்கும் முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். எமது ஆட்சியில் நாட்டின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கினோம். ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது என்றார்.
« PREV
NEXT »

No comments