Latest News

June 24, 2015

மைத்ரிபாலவுடன் கூட்டமைப்பினர் பேசியது என்ன?
by Unknown - 0

இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளதாக சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்து பேசியுள்ளது.

இதன்போது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் குறித்த தகவல்கள், மீள்குடியேற்றம் உட்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக சம்பந்தர் கூறுகிறார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுடன் பல சுற்றுகள் பேச்சுவார்த்தைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தியிருந்தனர்.

ஆனால் அரசுக்கும் அவர்களுக்கும் இடையேயான அந்தப் பேச்சுவார்த்தை இரண்டு ஆண்டுக்கும் மேலாக தடைபட்டிருந்தது.

அந்தப் பேச்சுகள் பழைய அரசுடன் நடைபெற்றன என்றும் “நாட்டில் தற்போது புது நிலமை, புது ஜனாதிபதி, புது அரசாங்கம்” என்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலுமே இச்சந்திப்பு நடைபெற்றது என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகும் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக இருப்பார் என்பதால் அவருடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு உட்பட பல விஷயங்கள் பேசப்பட்டன.

முன்னாள் விடுதலைப் புலிகளின் மறுவாழ்வு, வலிகாமம் மற்றும் சம்பூர் பகுதிகளில் அரச கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்கள் விடுவிக்கப்படுவது ஆகியவை குறித்தும் இன்று பேசப்பட்டன என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

அரச தரப்பில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் எனும் எண்ணம் வெளிப்படுகிறது என்றும் அது தொடர வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments