உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தமிழீழம் கேட்கவில்லை. பிரிக்கப்படாத இலங்கைக்குள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றே அவர் கேட்கின்றார் என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தேர்தலை இலக்குவைத்து மஹிந்த அரசால் விதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, மேற்படி தடையில் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
லண்டனில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் நடத்திய பேச்சு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு நேற்று வெள்ளிக்கிழமை பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“தேர்தலை நோக்காகக்கொண்டு மஹிந்த அரசால் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டது. ஐ.நா. சாசனத்துக்கமைய இந்தத் தடை தொடர்பாக ஆண்டு ரீதியில் மீளாய்வு தேவைப்படுகின்றது.
தடைசெய்யப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலி பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சிலர் மரணித்துள்ளனர். எனவே, இவ்வாறான நடவடிக்கை உண்மைக்குப் புறம்பானவையாகக் காணப்படுகிறது. எனவே, இது குறித்து மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளது.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தமிழீழம் கேட்கவில்லை. பிரிக்கப்படாத இலங்கைக்குள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றே அவர் கேட்கின்றார். அவரது கூற்றுகளில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழர்களுக்கு எதிராக சிலர் தவறான கருத்துகளை முன்வைக்கின்றனர்” – என்றார்.
No comments
Post a Comment