தமிழக முகாம்களிலிருந்து மீள்க் குடியேற வரும் மக்களுக்கான ஏற்பாடுகள் என்ன?
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
யாழ். குடா நாட்டில் தங்களது சொந்த இடங்களிலிருந்து 90களில் வெளியேறி, இந்தியா - தமிழகம் சென்று, அங்கு முகாம் வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களை தற்போதைய ஆட்சியில் இலங்கை வந்து மீள்க் குடியேறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கமைய சில குடும்பங்கள் இலங்கை வந்துள்ள நிலையில், இம் மக்கள் தங்களது சொந்த நிலங்களில் மீள்க் குடியேற இயலாத நிலையில் பரிதவித்து வருவதாக தெரிவிக்கின்றனர். எனவே, இம் மக்களின் மீள்க் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் என்ன? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழ் நாட்டிற்கு இடம் பெயர்ந்து சென்றிருந்த எமது மக்கள், அங்கு பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் முகாம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். தங்களது வாழ்க்கையை ஓரளவிற்குக் கொண்டு செல்லும் இவர்கள், எந்தவிதமான பொருளாதார வசதிகளையும் உடையவர்களல்லர்.
இந்த நிலையில், இலங்கையில் தங்களது சொந்த நிலங்களில் வந்து மீள்க் குடியேறுமாறும், இவ்வாறு வருபவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுமென்றும் தற்போதைய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கமைய குறிப்பிட்ட சிலர் இலங்கை வந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்தவர்கள் கோலாகலமாக வரவேற்கவும்பட்டனர்.
தமிழகத்தில் இம் மக்கள் வாழ்ந்திருந்தபோது, துயரங்கள் நிறைந்திருந்தும், குடியிருக்கத்தக்க வசதிகளை இந்திய அரசு செய்துகொடுத்திருந்தது. எனினும், தங்களது சொந்த நிலங்களில் வாழ வேண்டும் என்ற உணர்வுகளுடனும், இலங்கை அரசு தங்களது மீள்க் குடியேற்றத்திற்கான வசதிகளை செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையுடனும் இலங்கை திரும்பிய இம் மக்கள், இன்று அநாதரவான நிலையில் கைவிடப்பட்டுள்ளதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர்.
இம் மக்களின் மீள்க் குடியேற்றத்திற்கான வசதிகளை செய்து கொடுப்பது அரசின்
கடமையாகும். இதனை உணர்ந்து அரசு, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment