டுனிஸ்: பிரான்ஸ், குவைத்தில் இன்று தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்திய நிலையில் துனீஷியாவிலும் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் 27 பேர் கொல்லப்பட்டனர். இன்று பிரான்ஸில் ஒரு கேஸ் பேக்டரியில் ஐஎஸ் தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். அதில் ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார்.
அதேபோல குவைத்திலும் ஷியா பிரிவினரின் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் துனீஷியா தலைநகர் டுனிஸ் நகரில் இன்று வெளிநாட்டினரைக் குறி வைத்து ஹோட்டல் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டது. கடலோர ரிசார்ட்டில் இந்த தாக்குதல் நடந்தது. இதுகுறித்து துனீஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகம்மது அலி அரோய் கூறுகையில், வெளிநாட்டினரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்தது. அதில் 27 பேர் பலியாகினர். இது ஒரு தீவிரவாதத் தாக்குதல். ஒரு தீவிரவாதி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றார். துப்பாக்கிச் சூடு நடந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது. பலர் இறந்த நிலையில் ஆங்காங்கு கிடந்தனர். தாக்குதலில் ஈடுபட்டது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எனத் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸிலும் இன்று ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் திட்டமிட்டு இன்றைய தினத்தில் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
No comments
Post a Comment