புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்துக்குள், தேவையின்றித் தன்னை இழுத்து தனது பெயரைக் கெடுக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“புங்குடுதீவு எனது சொந்த இடம். வித்தியா கொலையை அடுத்து நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக நான் அங்கு சென்றிருந்தேன்.
கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களில் ஒருவரான, சுவிற்சர்லாந்தில் வந்த எம்.குமார் என்பவரின் தவறான செயற்பாடுகள் குறித்து நான் அறிவேன்.
குறித்த சந்தேகநபர் புங்குடுதீவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் இங்கு வந்தபோதெல்லாம், அந்தப் பகுதி மக்களிடையே பெரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளார்.
உண்மையில், சந்தேகநபரைக் கைது செய்வதற்கு நான் தான் காவல்துறையினரின் உதவியைக் கோரியிருந்தேன்.
எவ்வாறாயினும், அவர் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிச் சென்று விட்டார்.
செவ்வாய்க்கிழமை நான் புங்குடுதீவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது, மதுபோதையில் இருந்த சிலர், என்னை எதிராக கீழ்த்தரமான வார்த்தைகளால் ஏசினர்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளதாக வெளியான ஊகங்களை அடுத்து, எனது பெயரைக் கெடுப்பதற்காக, சில அரசியல் சக்திகள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்துள்ளன.
இது என்னை மிகவும் பாதித்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment