Latest News

May 06, 2015

பாதுகாப்பில்லை மீண்டும் விபூசிகா சிறுவர் இல்லத்தில்.
by admin - 0

பாதுகாப்பில்லை மீண்டும் விபூசிகா சிறுவர் இல்லத்தில்.
விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (06) அனுமதியளித்தார்.
பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அவரது மகள் விபூசிகா நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் தாயுடன் சேர்ந்தார். 

அவர்கள் முன்னர் தங்கியிருந்த தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிலிருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன.
அத்துடன், தனது மகளை தன்னுடன் தொடர்ந்து வைத்திருப்பது மகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், இதனால் அவரை மீண்டும் சிறுவர் இல்லத்திலேயே விடும்படி கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி வி.சுரேஸிடம் ஜெயக்குமாரி கோரினார்.
நன்னடத்தை அதிகாரி இதனை சட்டத்தரணி எஸ்.சிவபாலசுப்பிரமணியம் ஊடாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், விபூசிகா மீண்டும் மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்கவைத்து கல்விகற்பதற்கு அனுமதியளித்தார்.


தர்மபுரத்தில் வசிக்கும் போது விபூசிகா தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்தார். தாயார் கைது செய்யப்பட்ட பின்னர், சைவச்சிறுவர் இல்லத்திலிருந்து கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments