கட்டாரின் செஹெலியா பகுதியிலுள்ள குடியிருப்புத் தொடர் ஒன்றில் பரவிய தீயை அடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 21 இலங்கையர்களையும் கட்டார் அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.
இதற்கமைய, அவர்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையினை கட்டார் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கட்டாரின் செஹெலியா பகுதியில் பலகையால் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்பு தொடரில் கடந்த 8ஆம் திகதி தீ பரவியது.
இதனால் அந்நாட்டில் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்ற 350 இலங்கையர்கள் இருப்பிடங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பணிக்கு சமூகமளிக்காத சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலிகத் தங்குமிடத்தில் இருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் குறித்த 12 பேரும் கட்டார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் நந்தபால விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை பணியாளர்கள் பகிஷ்கரித்துள்ளனர்.
அத்தோடு, தீயினால் தமது உடமைகள் அனைத்தும் சேதமடைந்த போதிலும் இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், வீசா காலம் நிறைவுபெற்ற இலங்கைப் பணியாளர்கள் சிலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளபோதிலும் அவர்களைத் தொடர்ந்தும் பணியாற்றுமாறு அதிகாரிகள் பலவந்தப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, கட்டாரில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள பணியாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என பணியகத்தின் தலைவர் நந்தபால விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment