Latest News

May 23, 2015

தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப்போவதில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன்
by admin - 0


தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 
யேர்மனியின் டோட்முண்ட் நகரில் மே22ம் நாள் முதல் மூன்று நாள் அமர்வாக தொடங்கியுள்ளது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து ஆற்றிய உரையில்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் மூன்றாவது நேரடி அமர்வில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் மாவீரர்களை மனதில் இருத்தி எனது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அமர்வு நாம் ஐரோப்பாவில் கூட்டும் இரண்டாவது நேரடி அமர்வு. புதியயேதார் அரசியற்சூழலில் கூட்டப்படும் அமர்வு.
நாம் முன்னர் கூடிய நேரடி அமர்வுகளின் போது தாயகத்தில் இருந்த அரசியற் சூழலை விட இந்த அமர்வின் போது இருக்கும் அரசியற் சூழல் மாறுபட்டது.
தற்போது அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் சிறீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஆட்சியாளர்களுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு வலுவாக இருக்கிறது.
இலங்கைத்தீவின் மீதான புவிசார் அரசியற்போட்டிகளின் விளைவாக நடாத்தப்பட்ட ஆட்சி மாற்றம் இலங்கைத்தீவின் மீது அனைத்துலக அரசுகள் கொண்டிருக்கும் அக்கறையையும் அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்த மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதன் ஊடாக இலங்கைத்தீவின் புவிசார் அரசியற் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் செல்வாக்கு இலங்கைத்தீவில் ஒப்பீட்டளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இது இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் எதிர்பார்த்தவொரு மாற்றம். இம் மாற்றத்தை ஏற்படுத்த இவ் அரசுகள் திட்டம் வகுத்துச் செயற்பட்டிருந்தன. இவர்களின் இத் திட்டத்துக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் ஆதரவு வழங்கியிருக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடவடிக்கைகளின் தலைமைத் தளபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு தமது வாக்குகளால் தண்டனை வழங்க வேண்டும் என்ற எமது மக்களின் விருப்பமும் சீனாவின் செல்வாக்கை இலங்கைத்தீவில் மட்டுப்படுத்த முனைந்த அனைத்துலக அரசுகளின் தேவையும் இங்கு ஒரே நேர்கோட்டில் சந்தித்துள்ளன.

இவ் ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடியதுதானா? தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் எவை? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவற்றை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்?
இவை பற்றி இந்த அமர்வில் நாம் விரிவாகப் பேச வேண்டியவர்களாக உள்ளோம். மாறியுள்ள அரசியற்சூழலைக் கவனத்துக்கெடுத்து நமது செயற்பாடுகளை அதற்கமைய வடிவமைத்துக் கொள்ள வேண்டியவர்களாக நாம் இன்று உள்ளோம்.
இங்கே சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அடிப்படையான மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்துமா என்பது குறித்து நாம்முதலில் சிந்திக்க வேண்டும். எத்தகை மாற்றம் சிறீலங்காவில்  ஏற்பட்டுள்ளது என்பதனையும் நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
சிறீலங்காவின் அரச தலைவர் மாற்றப்பட்டுள்ளார். இது சிறீலங்காவின் வெளிநாட்டுக் கொள்கைளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காவின் அரசாங்க நிர்வாகத்துறையில் நல்லாட்சி ஏற்படுத்துவது குறித்துப் பேசப்படுகிறது. சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால் தமிழ் மக்கள் நிலைகுறித்து சிறீலங்காவின் அரசிலோ அரச கொள்கைகளிலோ மாற்றம் ஏற்படவில்லை. இவ்வாறு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கும் அளவுக்கு நாம் வரலாற்று மூடர்களும் அல்ல.
இவ் இடத்தில் சிறீலங்கா அரசில் மாற்றம் ஏற்படமுடியாமல் இருப்பதற்கான காரணங்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஓர் அரசு முக்கியமான மூன்று தூண்களின் மேல் கட்டப்பட்டிருக்கும். சட்டமியற்றல், நிர்வாகம் செய்தல், நீதி பரிபாலனம் செய்தல் என்பன ஒரு அரசின் பிரதான பணிகளாக இருக்கும்.
முறைசார் ஜனநாயக நாடுகளில் சட்டமியற்றுதல் நாடாளுமன்றத்தின் பணியாக இருக்கும். நிர்வாகம் செய்தல் அரசாங்கத்தின் பணியாக இருக்கும். நீதி பரிபாலனம் சுதந்திரமான நீதித்துறைக் கட்டமைப்பின் பொறுப்பில் இருக்கும்.
இவை மூன்றுமே ஒரு அரசின் அடிப்படைத் தூண்களாகும். இவற்றை விட ஊடகத்துறையும் ஒரு அரசின் நான்காவது தூணாக வர்ணிக்கப்படுவதுண்டு.
இங்கு இன்னுமொரு முக்கியமான விடயமும் உண்டு. ஓர் அரசு பின்பற்றும் வழிகாட்டுதல் கோட்பாடுகள் எவை என்பதும் அக் கோட்பாடுகள் எவ்வளவு வலிமை மிக்கவை என்பதுவும் மிகவும் முக்கியமானவை.
ஓர் அரசின் தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அந்த அரசின் அடிப்படைக் கோட்பாட்டிலும் அரசின் தூண்களாகக் கருதப்படும் இவ் நான்கு அம்சங்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். இதற்கானதொரு நிலைமை சிறீலங்காவில் இன்று இல்லை

சிறீலங்காவைப் பொறுத்தவரையில் அரசானாது இலங்கைத்தீவு ஒரு சிங்கள பௌத்தநாடு என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது. இக் கோட்பாடு மகாவம்ச மனநிலையில் இருந்து ஊற்றெடுக்கிறது.
இதற்கமையவே நாடாளுமன்றமும் அரசாங்க இயந்திரமும், நீதித்துறையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஊடகத்துறையும் இக் கோட்பாட்டிற்கமையவே இயங்குகிறது. இதனால் சிங்கள, பௌத்த மக்களே இலங்கைத்தீவில் தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கும் ஜனநாயகமாகவே சிறிலங்கா அரசு உள்ளது.
இத்தகைய அரசில் ஆட்சியாளர்கள் மாறுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மேலும் புதிய ஆட்சியாளர்களும் இதே இனவாதக் குட்டையில் ஊறிய மட்டைகளாக  இருக்கும் போது அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் எமது தேசியப் பிரச்சினைக்குத் தீர்வினைக் கொண்டு வரும் என்று இலவு காத்த கிளிகள் போல தமிழ் மக்கள் காத்திருக்க முடியாது.
கிளிகள் காத்திருந்த கதையில், இவ்வாறு காத்திருந்தமை இலவம் பழத்தின் தவறா அல்லது இலவம் பழத்தின் தன்மை புரியாத கிளிகளின் தவறா?
இங்கு எமக்கு சிறீலங்கா அரசின் தன்மை பற்றி நன்கு தெரியும். அவ்வாறு இருந்தும் புதிய ஆட்சியாளர்களின் மீது தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்ளமுடியும்?
இவ்வாறு நம்பிக்கை வைத்துக் காத்திருக்குமாறு எமது தலைவர்கள் எப்படி மக்களைக் கோர முடியும்?
நம்பிக்கையுடன் காத்திருப்பதன் ஊடாக எமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புவோமாக இருப்பின் நாம் இலவு காத்த கிளிகளை விட முட்டாள்களாகவே இருக்க முடியும்.
இங்குதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகள் எழுகின்றன.
அப்படியானால் நாம் என்னதான் செய்வது? எவ்வாறு முன்னோக்கி நகர்வது? அனைத்துலக சமூகத்தின் ஆதரவின்றி நாம் எதனையும் செய்து விட முடியுமா? எமது கோரிக்கைகளுக்கு அனைத்துலக ஆதரவைப் பெறுவது எவ்வாறு? ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசமாக வலுப்படுத்துவது எவ்வாறு? இதற்கான வளங்களைத் திரட்டிப் பெருக்குவது எவ்வாறு? போன்ற கேள்விகளை நாம் புதிய அரசியற்சூழலில் விவாதிக்க வேண்டும்.
இந்த அமர்வு இத்தகைய விவாதத்தைக் காத்திரமாக முன்னெடுக்கும் என்பது எனது நம்பிக்கை. கடந்த மாவீரர் நாள் செய்தியிலும் இவ் வருடப் புத்தாண்டு அறிக்கையிலும் எழக்கூடிய புதிய அரசியற்சூழலைக் கவனத்திற்கெடுத்து நான் சில கோரிக்கைளை முன்வைத்திருந்தேன்.

இக் கோரிக்கைகளை இவ் அமர்வில் ஒரு தடவை திருப்பிப் பார்த்துக் கொள்வதானது நாம் இப்போது விவாதிக்க வேண்டிய விடயங்களுக்கு உதவும் என நம்புகிறேன்

அக் கோரிக்கைகளாக அமைந்தவை,
*தமிழீழ மக்களது தேசத் தகைமையும் தாயகப்பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்
*ஈழத் தமிழர் தேசத்தின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான தீர்வுமுறை குறித்து தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் மக்கள் வாக்கெடுப்பொன்று அனைத்துலக சமூகத்தின் பங்கு பற்றலோடு நடாத்தப்பட வேண்டும்
*தமிழீழ மக்கள் மீது சிங்களத்தால் நடாத்தப்பட்ட, நடாத்தப்படுகின்ற இனஅழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
*போர் முடிவடைந்த பின்னரும் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கு வழிவகை செய்யக்கூடியதான அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்
*தமிழீழத் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்
* தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தினை அடிப்படையாகக் கொள்வதனை தாயகத் தலைவர்கள் ஏற்கக்கூடாது
* தமிழர் தாயகத்தில் சிங்களம் நடாத்தும் நிலக்கபளீகரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
* தமிழர் தாயகப் பகுதியின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் புலம் பெயர் தமிழ் மக்கள் அச்சமின்றிப் பங்குபற்றக்கூடிய வகையிலானதொரு பொறிமுறை அனைத்துலகச் சமூகத்தின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்படவேண்டும்
* தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி ஜனநாயக வழியில் உரையாடவும் விவாதிக்கவும் தடையாகவுள்ள அரசியலமைப்பின் 6வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும்
இக் கோரிக்கைகள் தொடர்பாகவும் தற்போதய அரசியற்சூழலில் விவாதித்து அவற்றை மெருகூட்டும் பணியையும் இந்த அமர்வு மேற்கொள்ளும் என்பது எனது எதிர்பார்ப்பு.
நாம் தற்போது 'சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக' என்ற கோரிக்கையை ஐ.நா. சபையின் முன் வைத்து, அதனை வலியுறுத்தும் வகையில் ஒரு மில்லியன் கையெழுத்துக்களுடன் கூடிய கோரிக்கைமனுவை ஐ.நா. சபையிடம் கையளிக்கும் இயக்கமொன்றை ஆரம்பித்திருக்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை வேகப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை பிரதமர் பணிமனையின் ஊடாக ஒருங்கிணைத்து பெரும் செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம்.
பதிப்பகம், ஆவணக்காப்பகம், Yes to Referendum அரசியல் இயக்கம், நிலக் கபளீகர எதிர்ப்பியக்கம், தமிழ்க் கல்வி மேம்பாட்டு மதியுரைப்பீடம், உலகத் தமிழர் பல்கலைக் கழகம், மாவீரர் நினைவாலயம், இந்தியாவில் தோழமை மைய பணிமனைகள், நல்லெண்ணத் தூதுவர்கள், மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணும் மையங்கள்,
தாயகத்தில் சுயதொழில் வளர்ச்சித் திட்டங்கள், பசுமையைக் காப்போம் - சூழல் விழிப்புணர்வு இயக்கம், உள்ளடங்கலாக 15 செயற்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அமையும் இப்பெரும் செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த தேவையான வளங்களைத் திரட்டுவது என்பது குறித்தும் இம் அமர்வு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்பதும் எனது நம்பிக்கை.

தமிழ் மக்களின் உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என்பதனைக் கருத்திற் கொண்டு தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாகவே எமது
உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டு செயற்பட வேண்டியவர்களாக தமிழர் தேசம் உள்ளது.
இந்த அமர்வு தமிழர் தேசத்தின் அரசியல் இராஜதந்திர வழிமுறையிலான போராட்டத்தை வலுப்படுத்தத் துணை செய்யும் என்ற நம்பிக்கையுடன், அமர்வில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறி எனது உரையினை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டிருந்தார்.
« PREV
NEXT »

No comments