யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மே 18ஆம் திகதியன்று கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, முள்ளிவாய்க்காலில் நிகழ்வொன்றை நடத்த சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இப்படியான நிகழ்வுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாதகமான நிலைமை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை சிங்களயே ஜாதிக பெரமுன என்ற அமைப்பின் தலைவர் மெடில்லே பஞ்ஞாலோக தேரர் விடுத்துள்ளார்.
இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருவதற்கு தடையில்லை என்ற போதிலும் அதனை முள்ளிவாய்க்காளில் நடத்துவதனை அனுமதிக்க முடியாதென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மே மாதம் 19ஆம் திகதி துக்க தினம் அல்லது நினைவு கூரும் தினமாக அனுஷ்டிக்கும் முயற்சிகள் இருந்தன. அந்த முயற்சிகளுக்குள் மனிதாபிமான தேவைகள் இருக்கலாம் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.
எவ்வாறாயினும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர,
உயிரிழந்த ஒருவரை நினைவு கூர்ந்து அவரது உறவினர் ஒருவர் விளக்கேற்றுவதையோ, ஏதேனும் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதையோ சட்டம் தடை செய்யவில்லை.
இலங்கை இராணுவம் என்பது சட்ட ரீதியான ஒரு படை, இப்படியான நிலையில் தீவிரவாத குழுவொன்றை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்துவது மற்றும் பொது செயற்பாடுகளில் ஈடுபடுவது முழுமையாக தடை செய்யப்பட்ட நடவடிக்கையாகும் என குறிப்பிட்டார்.
No comments
Post a Comment