முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது.
பொது மக்களின் தகவலையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதை நேரில் உறுதிப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் காணியின் ஒரு பகுதியையும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து பிக்கு ஒருவரால் படையினர் துணையுடன் இந்த அத்துமீறல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , பொது மக்களின் தகவலையடுத்து இன்று காலை கொக்கிளாய் சென்றிருந்தேன். விகாரை அமைக்கப்படும் காணிக்குச் சொந்தமானவர்களில் ஒருவருடனும் ஆவணங்களுடனும் குறித்த இடத்திற்குச் சென்றபோது 20 க்கும் அதிகமான படையினர் விகாரை கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பிக்குவுடன் உரையாட வேண்டும் என நான் கேட்டபோது பிக்கு அங்கில்லை என தெரிவித்தனர். உடனே படையினரிடம் குறித்த ஆவணங்களைக் காட்டி ,இவ்விடம் தனியார் காணி என்றும் அங்கு இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வது சட்டவிரோதம் என்றும் கூறினேன்.
அங்கிருந்த படையினர் தாம் தம்முடைய உயர் அதிகாரியின் பணிப்பின் பேரிலே அங்கே வந்துள்ளோம் என்றும் தமக்கு ஏதும் தெரியாது என்றும் தெரிவித்தனர். மேலும் பிக்கு கொழும்பு சென்றிருப்பதாக கூறி விட்டு விகாரையின் கட்டுமான பணிகளைத் தொடர்ந்தனர்.
சட்டவிரோதமான முறையில் படையினர் துணையுடன் ஒரு மதகுரு இவ்வாறு அத்துமீறுவது இங்கு சாதாரணமாகிவிட்டது. இது மதவாதத்தின் உச்சக்கட்டமாகும். இது குறித்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் தெரிவித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment