2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிக் 27 ரக விமானக் கொள்வனவின் போது லண்டனில் உள்ளதாக கூறப்பட்டு வழங்கப்பட்ட முகவரி பொய்யானது என்று சர்வதேச பொலிஸான இன்டர்போல் அறிவித்துள்ளது.
இன்டர்போலின் அறிவித்தலின்படி மிக் விமான கொள்வனவின் போது லண்டனில் உள்ள பெலிமிஸா ஹோல்டிங் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஊடாகவே பணம் கொடுக்கப்பட்டதாக முந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது.
எனினும் அவ்வாறான ஒரு நிறுவனம் லண்டனில் மாத்திரமல்ல. பிரித்தானியாவில் இல்லை என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை லண்டனில் உள்ளதாக கூறப்படும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய முகவரியும் பொய்யானது என்று இன்டர்போல் சுட்டிக்காட்டியுள்ளது.
மிக் 27ரக விமானக்கொள்வனவு தொடர்பான தகவல் முதன்முறையாக சண்டே டைம்ஸ் பாதுகாப்பு எழுத்தாளர் இக்பால் அத்தாஸினால் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சி கொல்லப்பட்ட லசந்த விக்ரமதுங்கவினால் சண்டேலீடர் செய்திதாளில் பிரசுரிக்கப்பட்டது.
இதன்படி 2006ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 3ஆம் திகதியன்று கொள்வனவு செய்யப்பட்ட மிக் 27 ரக விமானம் 1991ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பல தடவைகள் பழுதுபார்க்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தவகை விமானங்களை 2000ஆம் ஆண்டில் இலங்கை விமானப்படையும் நிராகரித்திருந்தது. இதேவேளை 2000ஆம் ஆண்டில் இலங்கை விமானப்படை மிக் 27 விமானங்களை 1.5மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்தது.
எனினும் 2006ஆம் ஆண்டு மிக்27ரக விமானம் 2.462 மில்லியன்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டது. இந்த கொள்வனவு தொடர்பில் அரசாங்கத்தில் இருந்து 2007ஆம் ஆண்டு வெளியேறியவரும் தற்போதைய வெளியுறவு அமைச்சருமாகிய மங்கள சமரவீரவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சியும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்தனர்.
அதில் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச இந்த விடயத்தில் ஊழல் புரிந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் இதனை மறுத்து அன்றைய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதேவேளை உக்ரைனில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த விமானத்துக்கான பணம் உக்ரைன் அரசாங்கத்துக்கோ அல்லது அதனுடன் தொடர்புடைய வங்கி ஒன்றுக்குக்கூடாகவோ பரிமாறப்பட்டிருக்கவேண்டும்.
எனினும் இந்த பணம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் லண்டனில் இருப்பதாக கூறப்பட்ட பெலிமிஸா ஹோல்டிங் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த விமானக் கொள்வனவுக்கு உக்ரைன் தீவிரவாதிகளுக்கு ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, தற்போது தேடப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரான ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவே இடைத்தரகராக இருந்துள்ளார்.
இதற்கிடையில் இந்த செய்தியை வெளிகொணர்ந்து வந்த சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார். சண்டே லீடர் பத்திரிகை நிறுவனம் ராஜபக்சவின் உறவினரான அஸங்க செனவிரட்ன என்பவரால் கொள்வனவு செய்யப்பட்டது.
மிக் 27ரக விமானக்கொள்வனவு செய்தி தொடர்பில் சண்டேலீடரும் கோத்தபாய ராஜபக்சவிடம் மன்னிப்பை கோரியது.
இந்த நிலையிலேயே கோத்தபாயவின் மிக் 27விமானக் கொள்வனவுக்கான லண்டன் முகவரி மற்றும் நிறுவனம் என்ற விடயங்கள் பொய்யானவை என்று இன்டர்போல் இலங்கையின் நிதிமோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை இன்று தமது கைதை தடுக்கவும் நிதிமோசடி தடுப்பு பிரிவின் சட்டவலுவுக்கு எதிராகவும் கோத்தபாய ராஜபக்ச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமையும் இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாக உள்ளது.
No comments
Post a Comment