Latest News

May 15, 2015

பிழையை சரி செய்ய 3 முறை முயன்றார் நீதிபதி குமாரசாமி.. தடுத்தார் தலைமை நீதிபதி!
by Unknown - 0


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் ஏற்பட்டுள்ள கணித பிழையை கூட நீதிபதி குமாரசாமி திருத்த முடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட கடன் தொகை கூட்டலில் தவறு இருப்பதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார். இதை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய கர்நாடக அரசுக்கு ஆச்சாரியா சிபாரிசு செய்துள்ளார்.

இந்நிலையில், சட்ட வல்லுநர்கள் கருத்துப்படி, கணித தவறை திருத்த ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமிக்கு உரிமையுள்ளது என்று கூறப்பட்டது. அதே நேரம் தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டது. மற்ற வழக்குகளை ஒப்பிடும்போது, இந்த வழக்கில், ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதால், கணித தவறையும் சரி செய்ய முடியாத நிலையில் குமாரசாமி இருந்தார்.

அதாவது, கணித தவறை சரி செய்தால், தீர்ப்பே தவறு என்ற சூழ்நிலை உருவாகிவிடும். ஏனெனில், கணக்கை சரி செய்தால், ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக 75.76 சதவீதம் சொத்து குவித்ததாக நீதிமன்றம் கூறியதாகிவிடும். அப்படி சொத்து குவித்தவரை எப்படி விடுதலை செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துவிடும்.

இந்நிலையில்தான், தீர்ப்பின் தவற்றை சுட்டிக் காட்டி சரி செய்ய கோருவதற்காக, உச்சநீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி, இன்று ஹைகோர்ட் வந்தார். இவர் இரு நாட்கள் முன்பே வர இருந்ததாகவும், அதிமுகவினர் கடத்தி சென்றதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவராகும்.

உயர்நீதிமன்ற பதிவாளர் பாட்டீலிடம் புகார் கொடுக்க வந்த கிருஷ்ணமூர்த்திக்கு ஹைகோர்ட்டில் வேறு மாதிரியான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அவரே கூறியதாவது: தீர்ப்பின் கூட்டலில் தவறு இருப்பது தெரிந்து, நீதிபதி குமாரசாமி, தீர்ப்பை திருத்த 3 முறை முயன்றதாகவும், ஆனால் ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலா, தீர்ப்பை திருத்த கூடாது என்று கூறிவிட்டதாகவும் கோர்ட்டில் என்னிடம் தெரிவித்தனர்.

ஏனெனில், கூட்டல் கணக்கை திருத்தினால், தீர்ப்பையே திருத்த வேண்டிவரும் என்பதால், தீர்ப்பை திருத்தும் அதிகாரம் ஹைகோர்ட்டுக்கு இல்லை என்பதை சுட்டிக் காட்டி, தலைமை நீதிபதி இவ்வாறு கூறியுள்ளார். எனவே நானும் இதுகுறித்து ஹைகோர்ட்டில் புகார் கொடுத்து பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து, நீதிபதி குமாரசாமி தலைமை நீதிபதியை சந்திக்க முயன்றதாகவும், ஆனால், அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், தீர்ப்பை மாற்ற அனுமதி இல்லை என்பதை மட்டும் அழுத்தமாக கூறிவிட்டதாகவும் ஹைகோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தீர்ப்பையோ, கணித தவறையோ இனி சுப்ரீம்கோர்ட்தான் மாற்றி எழுத வேண்டிவரும் என்று தெரிகிறது.

« PREV
NEXT »

No comments