Latest News

May 24, 2015

2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை!
by Unknown - 0

ஐபிஎல் பைனலில் மும்பைக்கு எதிராக டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால் மும்பை அணி அதிரடியாக ஆடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை குவித்தது. 

இதைத் தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் 8வது சீசன் பைனலில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாசில் வென்ற சென்னை முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து மும்பை முதலில் பேட் செய்தது. முதல் ஓவரில் அணியின் ஸ்கோர் 1 ரன்னாக இருந்தபோது தொடக்க வீரர் பார்த்திவ் பட்டேல் விக்கெட்டை மும்பை இழந்தது. 

பாப் டுப்ளெசிஸ் எறிந்த அருமையான த்ரோவால் ரன் அவுட் முறையில் பட்டேல் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் சளைக்காத மும்பை அதிரடி காண்பித்தது. பொல்லார்ட் 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசி 19வது ஓவரில் அவுட் ஆனார். 19 ஓவர்கள் முடிவில், மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்திருந்தது. 

கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்தை பாண்ட்யா எதிர்கொண்டார். அதில் ரன் கிடைக்கவில்லை. 2வது பந்தில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து பாண்ட்யா டக் அவுட் ஆனார். 3வது பந்தில் சிங்கிள் கிடைத்தது. 4வது பந்தை எதிர்கொண்ட ஹர்பஜன் சிங் அதை லாங்-ஆப் திசையில் சிக்சராக விளாசினார். 5வது பந்து அருமையான யார்க்கர் என்றபோதிலும், பந்து ஹர்பஜன் காலில் பட்டு பவுண்டரி சென்றது. அப்போது மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்னை எட்டியது. கடைசி பந்தில் ரன் கிடைக்கவில்லை. எனவே, மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. 

சென்னை வெற்றிக்கு 203 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆடிய சென்னை அணி, தொடக்கம் முதல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 4.4 ஓவர்களில் மைக்கேல் ஹஸ்சி 4 ரன்னில் நடையை கட்டினார். அப்போது அணியின் ஸ்கோர் 22ஆக இருந்தது. இதையடுத்து ட்வைன் ஸ்மித்துடன், சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. 

சென்னைக்கு ஓரளவுக்கு நம்பிக்கையளித்த ட்வைன் ஸ்மித் 57 ரன்களில் ஹர்பஜன் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். எதிர்பார்க்கப்பட்ட டுபிளெசிஸ் 1 ரன்னில் அவுட் ஆனார். அப்போதே சென்னைக்கு இறங்குமுகம் ஆரம்பித்துவிட்டது. டோணி 18, பிராவோ 9 ரன்கள் என நம்பிக்கை நட்சத்திரங்கள் அனைத்துமே ஏமாற்ற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

எனவே மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மும்பை பவுலர் மெக்லன்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் இறுதி போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன. இம்முறையும், அதே சாதனை தொடர்ந்துள்ளது. 

டாசில் வென்றபோதும், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யாமல் பவுலிங்கை தேர்ந்தெடுத்த சென்னை கேப்டன் டோணியின் வியூகம் தவறாக முடிந்துவிட்டது. மும்பை அணி 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது. சென்னை, கொல்கத்தா வரிசையில், மும்பையும், இருமுறை சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது. லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்விகண்ட மும்பை, அதிரடியாக முன்னேறி கோப்பையை கைப்பற்றி சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments