கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று ஈகச்சுட ரேற்றியமை தொடர்பில், விசாரணைக்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரனுக்கு பொலிஸாரால் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
அதற்க மைய முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு, வாக்குமூலம் வழங்குவதற்கு மாகாணசபை உறுப்பினர் சென்றிருந்தார். சுமார் 2 மணி நேரம் விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் போது, மாவீரர் நாளன்று ஈகச்சுடர் ஏற்றினீர்களா? ஊடகங்களில் நீங்கள் ஈகச்சுடர் ஏற்றியதாக வெளிவந்த ஒளிப்படங்கள் உண்மையானதா? இவ்வாறு செய்யுமாறு யாராவது தூண்டினார்களா? நீங்கள் யாரையாவது தூண்டினீர்களா? ஊடகங்களுக்கு ஒளிப்படங்கள் யார் வழங்கினார்கள்? ஈகச்சுடரேற்றும் போது ஒளிப்படம் எடுத்தது யார்? தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை அனுஷ்டிக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றவாறான பல கேள்விகளை பொலிஸார் எழுப்பியதாக மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
மாவீரர் நாளன்று ஈகச் சுடரேற்றியது நான்தான் என்று குறிப்பிட்டேன். ஊடகங்களில் வெளிவந்த ஒளிப்படங்கள் உண்மையானவை என்றும், ஒளிப்படங்களை எனது மனைவிதான் எடுத்தார் என்றும் இவ்வாறு ஈகச்சுடர் ஏற்றுமாறு யாரும் தூண்டவில்லை என்றும் பதிலளித்தேன்.
எங்கள் பிள்ளைகளை, உறவுகளை நினைவு கூர்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. அதனை யாரும் மறுக்க முடியாது என்றும் பொலிஸாருக்குத் தெரிவித்தேன். இதன் போது பொலிஸார், உங்கள் குடும்பத்தினரும் யாராவது மாவீரர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு நான், எங்கள் குடும்பத்தில் மாத்திரமல்ல இங்குள்ள எல்லாக் குடும்பங்களிலும் மாவீரர்கள் இருக்கின்றனர். இந்த வருடமும் எங்கள் உறவுகள் நினைவாக மாவீரர் நாளன்று ஈகச்சுடரேற்றுவேன் என்று பொலிஸாரிடம் தெரிவித்ததாக ரவிகரன் தெரிவித்தார்.
No comments
Post a Comment