கொழும்பு, மருதானையில் உணவகமொன்று நேற்று தீப்பிடித்துக் கொண்டதில் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் தீக்காயங்களுக்குள்ளானார்.
நண்பகல்(25-05-15) 12.45 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடம் முற்றாக எரிந்து சாம்பராகியதோடு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முற்றாக எரிந்து சேதமடைந்து காணப்பட்டன.
இச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரும் இந்த உணவகத்தில் பணியாற்றுபவர்களாவர். சமையல்காரராகப் பணியாற்றிய செல்லத் துரை என்பவரும் உணவகச் சிப்பந்திகளான லத்தீப், மொஹைதீன் ஆகிய மூவருமே உயிரிழந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
இம் மூவரும் தீயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக உணவகத்தின் பின்புறமிருந்த கழிவறை மற்றும் குளியல றைக்குள்ளும் ஒளிந்திருந்த சந்தர்ப்பத்தில் தீயினால் ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறியே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் கூறினர். அங்கு சிக்கியிருந்த மேலும் பலர் மேல் மாடிக்கு ஏறி ஜம்மியதுல் உலமா அலுவலக யன்னல்களை உடைத்துக்கொண்டு கீழே பாய்ந்து தப்பியுள்ளதை பலர் நேரில் கண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தினால் நேற்று நண்பகல் மருதானைப் பிரதேசத்தில் பதற்றமும் பெரும் களேபர நிலையும் காணப்பட்டது. பொலி ஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டி ருந்தனர். சம்பவம் இடம்பெற்ற உடனேயே தீயணைக்கும் படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்னரே தீயணைப்புப் படை குறித்த இடத்தை வந்தடைந்தது.
மருதானை, ஒராபிபாஷா வீதியில் அமைந்துள்ள இந்த Mercy Food Court எனும் உணவகம் பேக்கரியாகவும் செயற்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் கண்டி அக்குறணையைச் சேர்ந்தவர். இதன் மேல் மாடி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அலுவலகமாக செயற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தில் இரண்டு மாடிகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. இரசாயன பகுப்பாய்வாளர்கள் பகுப்பாய்வு நடவடிக்கைகளை நேற்று மேற்கொண்டனர்.
தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள இழப்பீடு இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை யென பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்ப விசாரணைகளினடிப்படையில் சமையல் எரிவாயுவிலிருந்து ஏற்பட்ட கசிவினாலேயே இந்த தீ ஏற்பட்டிருக்கலா மென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தின் போது உணவகத்தில் 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.
மிகவும் சன சந்தடியாகக் காணப்படும் இந்தப் பிரதேசத்தில் தீப் பிடித்துக் கொண்ட செய்தி பரவியதும் அங்கிருந்த வர்கள் முண்டியடித்து ஓட்டம் பிடித்தனர். குறிப்பிட்ட உணவகத்தினுள் உணவருந்திக் கொண்டிருந்தவர்களும் உணவகப் பணியாளர்களும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீதிக்கு ஓடினர். என்றாலும் கடையினுள் நெரிசல் கூடி வெளியில் ஓட முடியாமல் தவித்த மேற்படி உயிழந்த மூன்று பேரும் குளியலறைக் குள்ளும் கழிவறைக்குள்ளும் ஓடி தற்காப்புத் தேடி ஒளிந்து கொண்டனர். ஆனாலும், அவர்கள் மூவரும் பின்னர் சடலமாகவே மீட்கப்பட்டனர். இவர்களது உடலில் எரிகாயங்கள் எதுவுமில்லை. எரிவாயு புகையில் மூச்சுத் திணறியே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தீப்பற்றிய உணவகப் பிரதேசம் முற்றாக மனித நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment