இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் தம்மால் தயாரிக்கப்பட்ட “நோ பயர் சோன்” விவரண திரைப்படத்தில் விசேட சிங்கள பிரதியை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியதாக தயாரிப்பாளர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
லண்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றின்போது இந்த பிரதி கையளிக்கப்பட்டதாக மெக்ரே குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் குறித்த பிரதியுடன் இலங்கை ஜனாதிபதிக்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
அதில், “உண்மை வெளியாகும் எனவே அதற்கு இடைஞ்சல் மேற்கொள்ள வேண்டாம். உண்மைக்காக ஊக்குவிப்பை வழங்குங்கள்” என்று கோரப்பட்டுள்ளது.
நோ பயர் சோன் 2009ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சித்திரிக்கிறது.
அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டமை காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் லண்டனுக்கு சென்றிருந்த ஜனாதிபதி பிபிசி செவ்வி ஒன்றின் போது தாம் குறித்த காணொளியை பார்க்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை தமது காணொளிப் பிரதியை கையளித்த பின்னர் கருத்துரைத்த கெலம் மெக்ரே, உண்மை வெளிவரும் போதே இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களும் ஏனைய சமூகத்தினரும் சமாதானம், மற்றும் ஜனநாயக உரிமைகளுடன் வாழமுடியும் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
நன்றி ஈழம் ரஞ்சன்
No comments
Post a Comment