இந்தியாவிலிருந்து படகு மூலம் கடத்திவரப்பட்ட 8 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது
- மாரவிலவில் சம்பவம்; இருவர் கைது
மாரவில, தொடுவாவ கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 8.5 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து
மேற்கொண்ட விசாரணைகளிலேயே இந்த ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மேலும் சந்தேகத்தின் பேரில் மீனவர் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட வலையமைப்பு தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவ்டிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த போதைப் பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளவர் திரைப்பட இயக்குனர் என அடையளம் காணப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக இலங்கையிலும் இந்தியாவிலும் போதைப் பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை போதைப் பொருள் கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த தகவல் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தலமை காரியாலயத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பானவருமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இது தொடர்பில் மாரவில, தொடுவாவ கடற்கரை பிரதேசத்துக்கு சென்ற விஷேட பொலிஸ் குழு அங்கு தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் படி அன்றைய தினம் இரவு வேளையில் அக்கடற்கரை பகுதியில் உள்ள புதர் நிறைந்த காட்டுப்பகுதிக்குள் இருந்து 6 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த பொதிகளுக்குள் ஹெரோயின் போதைப் பொருள் உள்ளதைக் கண்டறிந்த பொலிஸார் அவற்றின் நிறை 6கிலோ 528 கிராம் என கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணைகளை விரிவு படுத்திய பொலிஸார் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதலையும் விரிவு படுத்தினர். இதன் பலனாக அதே புதர் காட்டுக்குள் இருந்து மேலும் இரு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் நிறை 2 கிலோவாகும். இந் நிலையில் மொத்தமாக கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளானது சுமார் 8.5 கிலோ என்றும் அதன் பெறுமதி 800 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமானது எனவும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் தலமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர மேலும் குறிப்பிட்டதாவது,
நேற்றும் நேற்று முன் தினமும் பொலிஸார் மேற்கொன்ட தொடர் விசாரணைகளுக்கு தொடுவாவ பிரதேச மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினர். இந்தியாவில் இருந்து இந்திய படகு ஊடாக கடத்திவரப்படும் ஹெரோயின் எல்லையில் வைத்து இலங்கை படகுக்கு மாற்றப்படுகின்றன. இதனைத் தொடர்ந்தே அவை தொடுவாவ கடற்கரைக்கு கொன்டுவாரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கரைக்கு அந்த போதைப் பொருளானது சிறிய கடற் களங்கள் ஊடாகவே கொன்டுவரப்பட்டுள்ளமையை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அதன் படி அந்த கடற் களத்தை செலுத்தியவரியும் பிறிதொருவரையும் நாம் நேற்று வரை கைது செய்தோம். அவர்கள் இருவருக்கும் எதிராக மாரவில நீதிமன்றில் 7 நாள் ர்தடுப்புக் காவல் உத்தரவை நாம் பெற்றுக்கொன்டுள்ளோம். இந் நிலையிலேயே பிரதான சந்தேக நபரை அடையாளம் கண்டு அவரைத் தேடி வலை வீசப்பட்டுள்ளது.
No comments
Post a Comment