Latest News

April 01, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்து வலுக்கிறது
by admin - 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த 28.03.2015 அன்று வெளியான வலம்புரி பத்திரிகையில் ‘விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் தலைமை தேவை’ என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் வரையப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரிய தலையங்கத்தின் முழு வடிவம் பின்வருமாறு,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அனைவரும் தமிழ் இனத்தின் பற்றுறுதி மிக்க விசுவாசிகள் என்றொரு எடுகோள் இருந்தால் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் பொறுப்பேற்பது பொருத்தமுடையது.

ஆனால் தமிழ் இனத்திற்கு இம்மியும் விசுவாசம் இல்லாத – தமது சுயலாபமே முழுவதும் என்ற மனநிலை கொண்டவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பதன் காரணமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப் பதவியை முதல்வர் விக்கினேஸ்வரன் பொறுப்பேற்பது பொருத்தமுடையதல்ல.

அவ்வாறு பொறுப்பேற்பதன் மூலம் விக்கினேஸ்வரனால், தமிழ் தேசிய கூட்டமைப்பை வழிப்படுத்த முடியும் என்று நினைப்பதும் நடைமுறைக்கு சாத்தியமன்று.

அதேநேரம் வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்களுக்கான பொருத்தமான உத்தமமான ஒரு தலைவர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இந்த அடிப்படையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பதவியை வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மேற்போந்த கோரிக்கை சுயநலமற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலொழுங்கில் உள்ள பிறழ்வுகளின் அவதானிப்பின் அடிப்படையில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இக்கோரிக்கையை காத்திரமான முக்கியத்துவத்தோடு தமிழ் மக்கள் நோக்க வேண்டும்.

ஏனெனில், வடபகுதிக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எங்கள் தமிழர் தாயகத்தின் முதல்வரைச் சந்திக்க மறுத்தார். இந்த மறுதலிப்போடு யாழ்.வந்த பிரதமர் ரணிலை கரம் கூப்பி வரவேற்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முண்டியடித்தனர் எனில் நாம் எங்கே போகிறோம்? என்பது புரிகிறதல்லவா!

ஆகையால்தான் கஜேந்திரகுமாரின் கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றோம்.

அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை முதல்வர் விக்கினேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் என்பதை விட, தமிழர்களுக்கான ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்க நீதியரசர் முன்வருவதே பொருத்தமும் பெறுமதியுமாக இருக்கும்.

தமிழர்களின் புதிய அரசியல் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய மனம், மொழி, மெய்யால் தமிழ் இனத்தை நேசிப்போர் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் பற்றுறுதி கொண்ட புத்திஜீவிகள் இணைந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் தமிழர்களுக்கு விடிவும் உரிமையும் கிடைக்கும். இல்லையேல் தமிழர் அரசை பிரதமர் ரணில் அவமதித்து செயற்படுவார். அதேவேளை அவரை வரவேற்க கூட்டமைப்பில் ஒரு தரப்பு முண்டியடிக்கும் என்பதே நிலைமையாகிவிடும்.


என்று ஆசிரியர் தலையைக்கம் தெரிவித்துள்ளது

« PREV
NEXT »

No comments