Latest News

April 01, 2015

ரணிலுக்குத் தெரியாத’ இரகசியத் தடுப்பு முகாம்களை அம்பலப்படுத்துகிறது ஜே.டி.எஸ்
by admin - 0



தனது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் இரகசியச் சித்திரவதைத் தடுப்பு முகாம்கள் ஏதுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுதலித்துள்ள போதிலும் அவை வடக்கே படையினரால் இப்போதும் நிர்வகிக்கப்பட்டு வருவதனை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பு (ஜே.டி.எஸ்) என்ற அமைப்பு இன்று அம்பலப்படுத்தியிருக்கிறது  

இவ்வாறு முல்லைத்தீவில் படையினரினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இரகசியச் சித்திரவதைத் தடுப்பு முகாம்களில் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நான்கு தமிழ் இளைஞர்களின் விபரங்களை ஜே.டி.எஸ் ஆதாரங்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வடக்கிற்குத் திக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஸ் கே பிரேமச்சந்திரன், நாட்டின் வடக்கு கிழக்கில் இவ்வாறான இரகசியத் தடுப்பு முகாம் குறித்து ஆதாரங்கள் சில கிடைத்திருப்பதாகவும், அவை குறித்துப் புதிய அரசு தீர்க்கமான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் கேட்டிருந்தார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்போது எழுப்பப்பட்ட இந்த விடயத்தினை மறுதலித்திருந்த பிரதமர் தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர்  நாட்டின் எந்தவொருமூலையிலும் இரகசியதடுப்பு முகாம்கள் எதுவும் இல்லை என்று அடித்துக்கூறியிருந்தார்.


“நாம் ஆட்சிக்கு வந்தபின்னர் நாட்டின் எப்பகுதியிலும் இரகசிய முகாம்கள் ஏதும் கிடையாது. முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றவை குறித்து என்னால் எதுவும் கூற முடியாது,” என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.

ஜே.டி.எஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், முல்லைதீவில் இராணுவத்தினரால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டிருக்கும் கேப்பாப்புலவுக் கிராமத்தில் இவ்வாறானதொரு இரகசியப் படைத் தடுப்பு முகாம் ஒன்று இருப்பதாகவும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் இன்றுவரை எந்தவிதத் தகவலும் இன்றி காணாமற்போகச் செய்யப்பட்டிருக்கும் தனது கணவர் செல்லையா விஸ்வநாதன் இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவரை விடுவிக்க அவரது மனைவி நீதிமன்றின் உதவியை நாடியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
 
2009 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தனது கணவர் செல்லையா விஸ்வநாதன் கேப்பாப்புலவு இராணுவ முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ள பாலநந்தினி விஸ்வநாதன், தனது கணவரைக் கண்டுபிடித்துத் தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படியும் முல்லைத்தீவு நீதிமன்றினைக் கேட்டிருக்கிறார்.

அவரது ஆட்கொணர்வு மனு நாளைய தினம் ஏப்ரல் முதலாம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கேப்பாப்புலவு ரகசிய தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர், அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்த போது தன்னுடன் சுமார் 50 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளமை தெரியவந்திருப்பதாகவும் ஜே.டி.எஸ் தெரிவித்துள்ளது.

இந்த நபரும் 2009 ஆண்டிலேயே அரச படையினரிடம் சரணடைந்திருக்கின்றார் என்ற தகவலை மட்டும் வெளியிட்டுள்ள ஜே.டி.எஸ், அவரது மேலதிக விபரங்களையும், அவரது உறவினர்கள் குறித்த விபரங்களையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடுவதில்லை என்று தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை கடந்த மூன்று வருடங்களாக எவ்வித விபரங்களும் இன்றிக் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்த தனது மகனை, இராணுவச் சிப்பாய்கள் சிலர் கடந்த மாத இறுதிப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துவந்திருப்பது தனக்குத் தெரியவந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
 

2011ஆம் ஆண்டு பலவந்தமாகக் காணாமற் செய்யப்பட்டிருந்த தனது மகனான இரவீந்திரன் மயூரன் கடந்த பெப்பிரவரி 27 ஆம் திகதி காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு மாஞ்சோலை பொதுவைத்தியசாலைக்குப் படையினரால் அழைத்துவரப்பட்டிருந்ததாகவும், உறவினர்கள் சிலரும், அயலவர்கள் சிலரும் அவரரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் அவரது  தாயாரான ரோஸ்மலர் தெரிவித்திருக்கிறார்.

மோசமான சித்திரவதை காரணமாக சிறுநீர் கோளாறு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் தனது மகன் அங்கிருக்கும் செய்தியைக் கேள்வியுற்றத் தான், மறுநாள் காலை அந்த வைத்தியசாலைக்கு விரைந்திருந்தபோதிலும் மகனை அங்கு காணமுடியவில்லை என்றும், இரவீந்திரன் மயூரன் என்ற பெயரில் எவரும் சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினர் ரோஸ்மலரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

“சிறுநீர் பரிசோதனைக்கென கூறி அழைத்துவரப்பட்டுள்ள ரவீந்திரன் மயூரன் குறித்த எந்தவித பதிவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என அவரை அழைத்துவந்த இராணுவத்தினர் வைத்தியசாலை பணியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக ஜே.டி.எஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவிலுள்ள இரகசியத் தடுப்பு முகாமொன்றிலேயே தான் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக மயூரன் அவரை சந்தித்த உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி தனக்கு கொடுக்கப்பட்டுவரும் துன்புறுத்தல்கள் காரணமாக தனது உடலுறுப்புக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உறவினர்களிடம் கூறியதாகவும் அவரது தாயார் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரச படையினரால் கைதுசெய்யப்பட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞர் ஒருவர் படையினரின் தடுப்பில் இருந்ததைக் கண்ணுற்றதாக அவரது சகோதரியொருவர்  தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ள 25 வயதுடைய தேவராசா ஜெகதீபன் என்ற தனது சகோதரர் ஒட்டுசுட்டான், சம்மன்குளம் பிரதேசத்தில் இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினருடன் இராணுவச் சீருடைக்கு ஒத்த உடையில் இருந்ததை கண்டதாக ஜெகதீபனின் பெரியப்பாவின் மகள் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அவருடன் பேசத் தனது மகளினால் முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ள ஜெகதீபனின் பெரியப்பா, இது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கொழும்பு மிரரிடம் கருத்துவெளியிட்ட கொழும்பிலுள்ள பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர், இவ்வாறான இரகசிய முகாம்களின் இருப்புக் குறித்து நாட்டின் பிரதமர் ஒருவருக்குத் தெரியாமலிருப்பது நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கே அச்சுறுத்துலை விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

“ஒன்றில் பிரதமர் இது குறித்த விடயங்களை மறைக்கிறார் அல்லது அவருக்கே தெரியாமல் படையினர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளைகளை இன்னமும் நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள் என்பதனையே இந்தத் தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனாலும், இதுகுறித்த மேலதிக விபரங்களை வெளியிடவேண்டிய இக்கட்டான நிலைக்கு அரசு இப்போது தள்ளப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments