Latest News

April 06, 2015

எதிர்கட்சித் தலைவர் பதவியை பெறுவதில் நியாயம் உள்ளது-சம்பந்தன்
by Unknown - 0


இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று அதன் சம்பந்தன்  கூறுகிறார்.

அப்பதவியை கூட்டமைப்பு கோருகிறது எனக் கூற முடியாது என்றாலும், அதில் ஒரு வெற்றிடம் வருமாக இருந்தால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நாட்டின் இரண்டு பெரிய பிரதானக் கட்சிகள், அப்பதவியை வகிக்கும் வல்லமை மற்றும் தகுதியை இழந்திருந்தால், நாடாளுமன்றத்தில் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி என்கிற வகையில் தங்களுக்கே அப்பதவி வரவேண்டும் என்பதில் தாங்கள் தெளிவாக உள்ளதாகவும் சம்பந்தர் கூறுகிறார்.

நாடாளுமன்றத்தில் நிமால் சிறிபால டி சில்வா அவர்களின் தலைமையிலான குழுவிலிருந்தவர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுந்தந்திரக் கூட்டமைப்பினர் பிரதான எதிர்கட்சி என்கிற தகமையை இழப்பார்களானால், எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்த இடத்திலுள்ள கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

மரபுகளின்படி அப்படியான முடிவே எடுக்கப்பட வேண்டும் என்பதையே தாங்கள் கூறியுள்ளதாகவும், அதில் எந்தத் தவறும் இல்லை என சம்பந்தர் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படக் கூடும் எனும் சூழல் நிலவினாலும், எதிர்கட்சித் தலைவர் பதவியையும் அதையும் தொடர்புபடுத்தக் கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

எதிட்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு கிடைத்தால், உண்மையான எதிர்கட்சியாக செயல்படுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »