Latest News

April 16, 2015

ஆந்திரா என்கவுண்டர்: வெறிச்சோடிக் கிடக்கும் திருப்பதி!
by Unknown - 0


ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து திருப்பதி செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் திருப்பதி வனப்பகுதியில் ஆந்திரா போலீசாரால் 20 தமிழக தொழிலாளர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட என்கவுண்டர் எனக் குற்றம் சாட்டப்பட்டதால் தமிழக - ஆந்திர எல்லையில் பதற்றம் உருவானது.

ஆந்திர போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் தாக்கப்பட்டன. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன. கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. பின்னர், போலீசாரின் பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது நிலைமை மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. 

இந்த தமிழர் படுகொலை காரணமாக திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பொதுவாகவே கூட்டமாக காணப்படும் திருப்பதியில், கோடை விடுமுறைக் காலத்தில் இன்னும் கூடுதலாக பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்லாததால் திருப்பதி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுவாக தமிழ் புத்தாண்டு அன்று ஏராளமான தமிழர்கள் திருப்பதிக்குச் செல்வது வழக்கம். அன்றைய தினம், திருப்பதியில் தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு துப்பாக்கிச் சூடு காரணமாக உண்டான பீதி இன்னும் மறையாததால், தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். இதனால், தமிழ் புத்தாண்டு அன்று திருப்பதியில் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது.

« PREV
NEXT »

No comments