![]() |
புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டு, சாட்சிகள் தரப்பில் விசாரிக்கப்பட்ட இளங்கோ. |
ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய இணைப்பதிவாளர் இன்று புதுச்சேரியில் வாக்குமூலம் பதிவு செய்தார்.
கடந்த 7-ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்றதாக தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆந்திர காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரி வருகின்றனர். புதுச்சேரியில் இன்று பந்த் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், படுகொலை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி முக்கிய சாட்சிகளான திருவண்ணாமலையை சேர்ந்த சேகர், தர்மபுரியை சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோர், டெல்லியில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
மற்றொரு சாட்சியான ஜவ்வாது மலையைச் சேர்ந்த இளங்கோ வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில் டெல்லிக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவரிடம் வாக்குமூலம் பெற தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரி நேரில் அனுப்பப்படுவார் என ஆணையம் தெரிவித்திருந்தது.
அவர்களுக்கு மதுரை தொண்டு நிறுவனம் பாதுகாப்பு அளித்து வருகிறது. ஆந்திர மாநில காவல்துறையால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தாலும், அவர்கள் வெளியே செல்லவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு தரவும் தமிழக காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் அரசினர் தங்கும் விடுதியில் தேசிய மனித உரிமைகள் ஆணைய இணைப்பதிவாளர் ஏ.கே. பராஷர் தலைமையிலான குழு முக்கிய சாட்சியான இளங்கோவிடம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தது.
என்கவுன்டர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தப்பி வந்தவர் இளங்கோ எனக் கருதப்படுகிறது. தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகளோ, அல்லது சாட்சியான இளங்கோவோ நிருபர்களிடம் தகவல் எதையும் கூற மறுத்துவிட்டனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இச்சம்பவத்தில் மேல்நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
No comments
Post a Comment