Latest News

April 11, 2015

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அறிக்கையினை அம்பலப்படுத்திய உருத்திரகுமாரனின் பதிலறிக்கை!
by Unknown - 0


சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்னைவக்கப்பட்ட அறிக்கையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் பதில் அறிக்கை வெளிவந்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் முதன்நாள் அமர்வில் சிறிலங்காவில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.

இந்த அறிக்கையின் பின்னால் மூடிமறைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரச இயந்திரத்தின் நடைத்தைகளை அம்பலப்படுத்தி தர்க்க ரீதியான வாதங்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனினால் பதில் அறிக்கையொன்று அனைத்துலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

ஆங்கிலத்தில் முன்வைக்க்பட்டிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையின் தமிழாக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் இலங்கைத் தீவில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராகப், போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகிய சர்வதேசக் குற்றங்களைச் செய்துள்ள குற்றவாளியாக இருக்கிறது.

சிறிலங்கா அரசு சிங்கள-பௌத்த பெரும்பான்மை சமூகத்தின் கலாச்சார யுத்தத் தலைமையைப் போல நடந்துள்ளது. இது 2011 மார்ச் 31 அன்று, ஐ.நா. பொதுச் செயலரின் சிறிலங்கா குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் பொறுப்புடைமைக்கு, தனது குடிமக்கள் மீது உரிமைகள் மீறல் நிகழ்ந்துள்ள போது அதன் பாத்திரமும் பொறுப்பும் பற்றிய அரசின் அதிகார பூர்வ ஒப்புகை தேவைப்படுகிறது.'குறிப்பிடப்பட்டுள்ளது.

1949ஆண்டின் நான்கு ஜெனீவா பொது இணக்க உடன்பாடுகள் மற்றும் 1948 இனப்படுகொலை பொது இணக்க உடன்பாடு ஆகியவற்றில் ஒரு தரப்பாக இருந்தது சிறிலங்கா அரசு தான், அரசாங்கம் அல்ல. ஆகவே அரசாங்க மாற்றம் என்பது, சிறிலங்கா அரசு ஈழத் தமிழர்களுக்குத் துனபத்தை ஏற்படுத்தியது அந்த உடன்பாடுகளை மீறியதற்கு சட்டபூர்வமாகப் பொருந்தாது.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்கா குறித்த விசாரணையை ஒத்தி வைப்பதற்கு மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுரான இளவரசர் ஜெய்த்ரா அத் அல்-ஹசேன் மற்றும் மங்கள சமரவீரா ஆகியோர் கொடுத்துள்ள காரணங்களில் நாங்கள் வேறுபாட்டைக் காண்கிறோம்.

அந்த ஒத்திவைப்பு மனித உரிமைகள் குறித்து 'முற்போக்கான நடவடிக்கைகளை' எடுப்பதற்கு சிறிலங்காவை அனுமதிக்கும் என்று இருவருமே ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், 2015 பிப்ரவரி 16 அன்று ஐ.நா. தூதர் வெளியிட்ட அவரது அறிக்கையில் கூறியதாவது:

'முதலாவது காலஅட்டவணையைப் பின்பற்றுவதற்கான சரியான வாதங்கள் இருக்கின்றன, மேலும் சிறிலங்காவில் மாறியுள்ள சூழல் தருணத்தையும், அறிக்கையைப் பலப்படுத்தும் முக்கியமான புதிய அமைப்புத் தோன்றும் சாத்தியத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அறிக்கையின் கருதுகோளை சிறிது நீட்டிப்பதை மறுப்பதற்கான வாதங்களும் பலமாக இருக்கின்றன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் அளித்த வாக்குகளை தற்போதைய அதிபருக்கு அளித்த வாக்குகளாக தவறாகச் சித்தரித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2015 அதிபர் தேர்தலுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில், பிற விடயங்களுக்கிடையில் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவில் அதிபர் தேர்தலில் மகிந்த இராஜபக்சவின் தோல்வி தமிழ் வாக்காளர்கள் அவருக்கு அளித்த தண்டனை என்பதாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும், மாறாக வெற்றியாளரான மைத்திரிபால சிரிசேனவின் கொள்கைகளுக்கு ஆதரவானதாகவோ, அல்லது ஒற்றை ஆட்சிமுறையை உயர்த்திப்பிடிக்கும் அரசியலமைப்புக்கு ஒப்புதலளித்ததாகவோ பார்க்கப்படக்கூடாது.

தமிழ் வாக்காளர்கள் எடுத்த நிலைப்பாட்டை சிறிசேனவுக்கு ஆதரவானதாகச் சித்தரிக்க யாராவது முயற்சி செய்வார்களானால், அவர்கள் ஒன்று, தமிழ் மக்களின் விருப்பங்களை மெய்யாக உணர்ந்துகொள்ளாதவர்களாக அலல்து மெய்யான பாசாங்குக்காரர்களாகவே தான் இருப்பார்கள்.

இதே கருத்தைத் தான் யாழ்ப்பாணப் பலகலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது. ஐ.நா.தூதரக அதிகாரியிடம் அவர்கள் அளித்த மனுவில், பிற விடயங்களுக்கிடையில், தமிழ் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என்பது உண்மைதான்,

அதேவேளையில் இது வெறுமனே இராஜபக்சவின் எதிர்ப்பு வாக்கு மட்டுமே என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். ஆட்சி மாற்றத்தின் மூலம் எந்தப் பேருண்மையான மாற்றமும் விளையும் என்று நம்பிக்கையில் நாங்கள் வாக்களிக்கவில்லை.

புதிய ஜனாதிபதி, அவரது தேர்தல் அறிக்கை, அவரது நூறு நாள் செயல்திட்டம் ஆகிய இரண்டிலுமே, தமிழர்கள் பிரச்சினை குறித்து தெளிவாகத் தெரியும் வகையில், முற்றிலும் மௌனம் சாதித்துள்ளார்.

தமிழர்களின் வாக்குகள் அரசாங்கத்துக்கு ஆதரவானவை என்று விளக்கமளிப்பது மென்மையாகச் சொல்வதானால், நேர்மையற்றதாகும். சமாதானம், நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு நடவடிக்கையை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையில் ஈழத் தமிழர்கள் சிங்களத் தலைவர்களை ஆதரித்த நிகழ்வுகளாக இருந்துள்ளன என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

1994 ஆண்டில் துரோகத்தனமான உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டிருந்த போதும், தற்போதைய ஆட்சிமாற்றத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் அதிகபட்சமாக வாக்களித்தார்கள்.

அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது, தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை மீட்டுத்தருவது என்ற கொள்கை அடிப்படையில் வெற்றிபெற்றார்.

இருப்பினும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களுக்குள் யுத்தம் மீண்டும் தொடங்கியது, அப்போது தமிழ் குடிமக்கள் திட்டமிட்டு – ரிவிசெரா மற்றும் ஜெயசிகுரு நடவடிக்கை – இலக்காக்கப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர்.

வரலாற்று ரீதியாக, சமாதானம் மற்றும் நீதி என்ற கொள்கைகளின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொண்ட, ஆனால் அதை வழங்கத் தவறியது மட்டுமின்றி, தமிழர்களைத் திட்டமிட்டுக் குறிவைத்துத் தாக்கிய ஜனாதிபதிகளை தேர்ந்தெடுத்த அனுபவம் தமிழர்களுக்கு உண்டு.

புதிய சிறிலங்கா ஆட்சியில் தற்போதைய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீராவே சந்திரிகா அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தார், மேலும் வடக்கில், குறிப்பாக அங்கு உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக சமூக ஒத்திசைவைக் சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டார் என்பதை அறிந்துகொள்வது முக்கியமாகும்.

மேலும் யாழ்ப்பாணத்திற்குச் சற்று வெளியே, செம்மணியில் அடையாளமற்ற பெருந்திரள் கல்லறைகளில் முடிவடைந்த காலக்கட்டத்தின் போது, தமிழர்களைக் குறிவைத்துக் கொன்று குவித்ததையும் குறித்துக்கொள்வதும் முக்கியமாகும்.

சிறிலங்கா வெளிவிகார அமைச்சரின் உரையில் 'வாக்குறுதிகளும் நல்லெண்ணங்களுமே' நிரம்பியிருந்தன. சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகள் என்று வரும்போது மிகவும் தாராளமாகவே இருக்கிறது என்பதை சிறிலங்கா அரசியல் வரலாறு காட்டுகிறது.

எடுத்துக்காட்டாக, 3000 குடிமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தமிழர் விரோதப் படுகொலையைத் தொடர்ந்து, 1983 ஓகஸ்டில், அப்போதைய சிறிலங்காத் தூதர் ஐ.நா. துணை ஆணையத்தில் பின்வரும் வாக்குறுதியை அளித்தார்.

"அந்தக் கொலைகளுக்கும், வன்முறைக்கும், அழிவுச் செயல்களுக்கும் பொறுப்பான அனைவரையும், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய அந்தஸ்து, சித்தாந்தம் அல்லது அரசியல் கூட்டணிகள் பற்றிக் கருதிப்பாராமல், நீதியின் முன்பு கொண்டுவந்து நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்கள். இதில் எந்த விதிவிலக்கும் இருக்காது."

ஐக்கிய தேசியக் கட்சியின், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்ந்திருந்த கட்சியின், ஆட்சியால் மேற்கண்ட அறிக்கை அளிக்கப்பட்டது. இன்றுவரை, எந்த விசாரணையும் இல்லை, எந்த வழக்கும் இல்லை. இது தனது வாக்குறுதிகளைக் காக்கும் பாரம்பரியம் இல்லாத அரசு,.

இது அண்மையில் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு வடக்கு மாகாணப் பேரவை முதலமைச்சர் நீதிபதி சி.விக்னேஸ்வரன் அளித்த நேர்காணலில் எதிரொலித்தது. 'கடந்தகாலத்தில் வாக்குறுதிகளைக் காப்பாற்றாத வரலாறு பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிறேன்' என்று அதில் அவர்கூறியுள்ளார்.

(பிப்ரவரி 23, 2015). 'மனித உரிமைகள் செயல்வீரர்கள், ஊடக நபர்கள், குடிமைச் சமுதாயக் குழுக்கள் ஆகியோர் அச்சுறுத்தல் குறித்த அல்லது துன்புறுத்தல் குறித்த அச்சமின்றித் தங்களுடைய பணியில் ஈடுபடுவதற்கு மீண்டும் ஒருமுறை சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள்' என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் திரு.சமரவீர ஆற்றிய உரையில் துணிச்சலுடன் கூறிக் கொள்கிறார்.

ஆனால் உண்மை நிலை அவர் வரைந்துகாட்டும் கவித்துவமான சித்திரத்திற்கு வெகு தொலைவில் உள்ளது. 

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தமிழ் அகதிகளையும் நாடுகடந்தவர்களையும், செயல்வீரர்களையும், ஊடகவியலாளர்களையும், பிறரையும் சிறிலங்கா திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் சிரிலங்கா அரசு இயந்திரம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மக்களைக் கைது செய்வதையும் அல்லது அதன் வழியாக வெளியேறுவோரைத் தடுப்புக் காவலில் வைப்பதையும் நிறுத்தவில்லை. கைதுகளும் வேவு பார்ப்பதும் நாட்டின் வடகிழக்கில் தொடர்கின்றன.

உலகெங்கும் உள்ள தமிழர்களின் 27 அமைப்புகள் மற்றும் 428 தனிநபர்கள் அடங்கிய கறுப்புப் பட்டியல் இன்னும் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் துன்புறுத்தலை நிறுத்துவதில் சிறிலங்கா அரசு நேர்மையாக உள்ளது என்பதைக் காட்டுவதற்கான ஒரு வழி, ஒன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திரும்பப்பெறுவது, அல்லது 2002 ஆண்டில் அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு செய்யப்பட்டது போல், குறைந்தபட்சம் அதன் செயல்பாட்டை இடைநிறுத்தி வைப்பது ஆகும்.

இங்கு குறிப்பாகக் கவனிக்க வேண்டியது சிறிலங்கா வெளிவிவார அமைச்சர் குறிப்பிட்ட புதிய சாட்சியங்கள் பாதுகாப்புச் சட்டம் இருக்கிறது என்பது பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள போது, பொருளற்றதாக இருக்கிறது.

அரசியல் கைதிகளின் பட்டியலை வெளியிடுவது போன்ற உடனடியாகக் கவனிக்கக் கூடிய பல்வேறு உடனடிப் பிரச்சினைகள் இருகின்றன. அயலுறவு அமைச்சர் குறிப்பிட்ட விதத்தில், குற்றச்சாட்டு எதுவுமில்லாத சிறையாளிகளை விடுதலை செய்யத் தொடங்குவதற்கு முன்னதாக,

காணாமற்போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் பட்டியல்களைத் தயாரிப்பதற்கு ஐசிஆர்சி க்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இலங்கைக் காவல்துறையிடம் அதுபோன்ற ஒரு பட்டியல் இல்லை என்றால், அது காவல்துறையின் கண்டிக்கதக்க மோசமான நிலையாகும்.

வெலிக்கடை சிறையில் 182 பேருக்கும் மேலாக இருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. கொழும்புக்கு வெளியிலும் இராணுவ முகாம்களும் சிறைகளும் இருக்கின்றன.

அனுராதபுரம் மாநகர் போன்றவற்றில் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்புக் காவலில் உள்ளோர் குற்றச்சாட்டு எதுவும் இல்லாமலே வைக்கப்பட்டுள்ளனர். இரகசியத் தடுப்புக் காவல் இடங்களும் இருக்கின்றன.

அவை பற்றித் தெரியாது என்று அரசாங்கம் இப்போது மறுக்கிறது. அங்கு வைக்கப்பட்டு, வழக்கமாக சித்திரவதைக்கும் வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவோரின் கதி என்ன? இந்தத் துரதிர்ஷ்டசாலிகளின் பட்டியல் எங்கே? பெயர்கள் எங்கே? அவர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் எங்கே? அவர்களின் நிலைதான் என்ன?

காணாமற்போனோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. இது பற்றிய விவரம் அரசாங்கத்திடம் இல்லை என்பதை நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது. ஜெயகுமாரியின் வழக்கில் கூட, அவர் மீது குற்றச்சாட்டு எதுவும் வைக்கப்படாமல் இருப்பதற்கு, 'விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன' என்ற வழக்கமான காரணம் கூறப்படுகிறது.

அவர் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக இன்னுமா விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மக்களைக் குற்றச்சாட்டு எதுவும் இல்லாமலே இன்னும் காவலில் வைத்திருப்பதற்கும் அதே காரணம் தான் கூறப்படுகிறது. இது நீதியின் கேலிகூத்தாக இருக்கிறது.

குறைந்தபட்சம் வடக்கு கிழக்கில் குவிக்கபட்டிருக்கும் ராணுவத்தின் ஒரு பகுதியாவது திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டு, சட்டம், ஒழுங்கு காவல்துறைக்கு மாற்றப்பட முடியும். அதற்குப் பதிலாக, இராணுவத்துக்கு காவல்துறை அதிகாரங்களை அளித்த பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் மீண்டும் புதுபிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை இணை அமைச்சரும் பிறரும் இராணுவம் வடக்கிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறியுள்ளனர்.

மனித உரிமைப் பாதுகாவலர்கள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர், ஏனென்றால் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டங்கள் இன்னும் கூட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் கூட, தாயகம் திரும்பிய தஞ்சம் தேடிப் போனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவர்களில் சிலர் மோசமான சித்திரவதைக்குள்ளானதாகவும் செய்திகள் வருகின்றன.

சர்வதேச விமான நிலையங்களில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் அழைத்துச் செல்லப்படுகிற பல நிகழ்வுகள் இருக்கின்றன.

இந்தவாரத்திலேயே (மார்ச் 2, 2015) தனது நோய்வாய்ப்பட்ட தாயாரைப் பார்த்துவிட்டு, பிரான்சு திரும்பிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பெண்ணும் அவருடைய 8 வயது மகளும் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போதே அவர்கள் அளவுக்கு மிகுதியாக நம்பிக்கையளிப்பவர்களாகக் காணப்பட்டால், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் சிங்கள தேசியவாத சக்திகளிடம் தோற்றுவிடவும், மகிந்த இராஜபக்ச மீண்டும் வரவும் வாய்ப்பாகிவிடும் என்பது இலங்கை அரசாங்கத்தின் வாதமாகும்.

அந்த வாதம் சர்வதேச சமூகத்தாலும் ஆதரிக்கப்படுகிறது. ஜே.எச்.யு.வும் தளபதி சரத் பொன்சேகாவின் கட்சியும் புதிய அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் விரும்பினால், அது சிங்கள் பௌத்த தேசிய வாதிகளின் அச்சங்களைப் போக்கிட ஜே.எச்.யு. வுடன் சேர்ந்து வேலை செய்யலாம், ஆனால் அது அப்படிச் செய்யாது.

13 ஆவது திருத்தத்தில் பொறிக்கப்பட்டுள்ளதற்கும் மேலான எந்த அதிகாரத்தையும் வழங்குவதற்கு சிறிலங்கா அரசியல் சட்டத்தின் 83 வது பிரிவின் கீழ் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவது கட்டாயமாகும்.சிங்கள மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும், அவர்களுடைய ஒப்புதலைப் பெற வேண்டும்.

தேர்தலுக்குப் பிறகு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்குச் சம்மதிக்கச் செய்வது எது என்று அரசாங்கமோ அல்லது சர்வதேச சமூகமோ சுட்டிக்காட்டவில்லை. அதற்கு மாற்றாக, நிலவும் அரசியலமைப்புச் சட்டத்தின் அளவுகோள்களுக்கு அப்பால் செயல்பட முடியும் என்று தற்போதைய ஆட்சி நினைக்குமானால், அவர்கள் தமிழ் மக்களிடமும் சிங்கள மக்களிடமும் உத்தரவைப் பெறவேண்டும்.

அந்த நடவடிக்கைகள் குறித்து தேர்தலுக்கு முன்னதாக நீங்கள் விவாதிக்கவில்லையென்றால், ஒரு ஜனநாயக ரீதியான மக்கள் கட்டளையை எப்படிப் பெறமுடியும்? 

தேர்தல்களுக்கு முன்போ அல்லது பிறகோ சிங்களர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையிலான உறவுகளில் எந்த அடிப்படை மாற்றத்தையும் நினைத்துப் பார்க்கமுடியாது. அதனால் தான் ஜே.எச் யு. அமைதியாக இருந்து, அதன் சிங்கள் பௌத்த தேசியவாத வழிகளைப் பின்பற்றிச் செல்லும்.

அதனால் தான் தற்போதைய அரசாங்கம் ஒ.எஸ்.ஐ.எல்.அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொள்ளாது (சிறிசேனாவும் பொன்சேகாவும் 2009 இல் சண்டையின் இறுதி நாட்களில் தாங்களாக ஒப்புக்கொடுத்துக் கொண்ட இராணுவத் தலைவர்களாக இருந்தார்கள்) அதனால் தான் குடிமைப்பணி ஆளுநருக்குப் பதிலாக முன்னாள் இராணுவத்தினரான தூதர் வடக்கு மாகாண்த்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவர் கடந்தகாலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உட்பட, சர்வதேச அமைப்புகளில் இலங்கை இராணுவ அத்துமீறல்களை ஆதரிப்பதில் அவரது தீவிரமான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவராக இருந்தார்.

தற்போதைய அரசாங்கம் அரசின் மீது சிங்கள் மேலாதிக்கத்தை நிரந்தரமாக நீட்டிப்பதிலேயே ஆர்வம் கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்காலத்திற்கான பெரிய பெரிய வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் உள்ளார்ந்த நோக்கம் தந்திரமாக மறைக்கப்படுகிறது.

புதிய ஆட்சி ஒரு கூடுதலான சகிப்புத்தன்மை கொண்ட, பன்மைத்தன்மை கொண்ட அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்கு உடனடியாகச் செய்யக் கூடியதாக கண்ணுக்குத் தெரியக் கூடிய வகையில் எதுவமில்லை.

புதிய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் சமூக உள்ளடக்கம் அத்தகைய ஒரு சூழல் தோன்றுவதற்கு அனுமதிக்காது.

ஐ.நா.தூதரக அதிகாரி, சிறப்புச் செய்தியாளர் மற்றும் தாமாக அன்றி, நிர்பந்தத்தால் காணாமற்போனவர்கள் குறித்த செயல் குழு ஆகியோரை சிரிலங்கா வருமாறு வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

இருப்பினும், உண்மையான மற்றும் உடனடியான கருதுகோள் ஒ.ஐ.எஸ்.எல். ஆக இருக்கும் போது, ஒ.ஐ.எஸ்.எல். இலங்கைக்கு வருவதற்கு ஏன் அழைக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையில் தீவிரமாக இருக்குமானால், சந்தேகத்துக்குரிய பெருந்திரள் கல்லறைகளைப் பார்வையிடுவதற்கும்,

தடைசெய்யப்பட்ட வேதியியல் ஆயுதங்கள் எவையும் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதைப் பார்க்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் இரகசியமாக நேர்காணலில் ஈடுபடவும் அது ஒ.ஐ.எஸ்.எல். ஐ தாமதமின்றி வருமாறு அழைக்க வேண்டும்.

புதிய அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணையமும் (எல்.எல்.ஆர்.சி.) அல்லது காணாமற்போனவர்கள் ஆணையம் ஆகியவற்றுக்கு அப்பால் நகர விரும்புகிறது என்பதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.

இரண்டு அமைப்புக்களுமே சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் பாதிக்கபட்டவர்கள் குழுக்கள் ஆகிய இரண்டாலும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

எல்.எல்.ஆர்.சி. ஆயுதப்படைகளால் தனிப்பட்ட அத்துமீறல்கள் இருந்ததாக நான்கு நிகழ்வுகளை மட்டுமே அடையாளப்படுத்தியுள்ளது. உறுதியாக, ஆயுதப்படைகளின் தனிப்பட்ட அத்துமீறல்கள் நான்கு மட்டுமே 40,000 மக்களுக்கும் மேலாகப் பெருந்திரள் படுகொலையில் முடிந்திருக்க முடியாது என்பதை ஐ.நா. பொதுச் செயலரின் நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

எல்.எல்.ஆர்.சி. இலங்கை அரசின் நிறுவனமயமாக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்களை திட்டமிட்டே மறைப்பதற்கான ஒரு முயற்சியாக இருக்கிறது.

அப்படித் தனிப்பட்ட அத்துமீறல்களாகச் சித்தரிக்கப்படுபவது ஐ.நா. பொதுச் செயலரின் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரமான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துச் செல்லும் வழியை வழங்குவதற்கான ஒரு முயற்சியாகவே இருக்கிறது.

எல்.எல்.ஆர்.சி. தீவிரமான குறைபாடுள்ளதாகும், அது ஒரு பயனளிக்கக கூடிய பொறுப்புடைமை அமைப்புக்கான சர்வதேசத் தரங்களைக் கொண்டதாக இல்லை.' இலங்கையின் பொறுப்புடைமை குறித்த ஐ.நா.பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை (மார்ச் 31, 2011).

சர்வதேச ஈடுபாட்டுடன் ஓர் உள்நாட்டு அமைப்பை வைத்துகொள்ளும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிதல், பொறுப்புடைமைச் செயல்முறையை தாமதப்படுத்தி, இறுதியாகச் சீர்குலைக்கும் ஒரு செயல் தந்திரம் ஆகும்.

கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், காணாமற்போனவர்கள் ஆணையத்திற்கு சுதந்திரம் இல்லை என்பதாலும், அதுவே யுத்தக் குற்றங்களுக்கான ஆணையமாகச் செயல்படுத்தப்பட்டதன் காரணமாகவும் குடிமைச் சமூகமும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளும் அதைப் புறக்கணிக்க முடிவுசெய்தார்கள்.

அந்த ஆணையம், ஆக்கபூர்வமான பரிந்துரைகளையும் தீர்வுகளையும் உருவாக்கும் ஓர் அறிக்கையைத் தயார்செய்வது பற்றிச் சிந்திக்காமல் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தைத் திருப்திப்படுத்துவதற்கு, ஆகஸ்டு 2015 க்குள் முடிந்தவரை பலரையும் விசாரிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

ஆணையங்களின் விசாரணைகள் பயங்கரவாதப் புலனாய்வுத்துறை, குற்றப் புலனாய்வுத துறை அதிகாரிகள் முன்னிலையில் முழுமையாகக் கண்காணிக்கப்படுகின்றன, மேலும் அவற்றின் இருத்தலே சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சுறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய உளவுக்கண்காணிப்பு இந்த வாரத்த்தில் கூட நடந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலைமைகளில், எந்த உள்நாட்டு அமைப்பும் நடப்பிலுள்ள தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நிறுவனமயமாக்கப்பட்ட நடவடிக்கைக்குத் தீர்வாக இருக்கமுடியாது.

ஏனென்றால் அத்தகைய ஓர் அமைப்பு அதே நிலைமையைத் தொடர்வதாகவே இருக்கும். இந்த இரண்டு ஆணையங்களை நோக்கிய விமர்சனங்கள், குறிப்பாக அச்சமும் அச்சுறுத்தலும் இன்னும் தொடரும் நிலையில், தொடர்ந்து பயன்படுத்தப்பட முடியும்.

பெருந்திரள் வன்கொடுமைகளுக்குப் பொறுப்பானவர்களை மறைப்பதற்குப் புதிய அரசாங்கம் முடிந்தவரை முயற்சி செய்துகொண்டிருக்கிறது என்பதை, பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்ச இலங்கையில் இருக்கும் வரை பாதுகாப்பாக இருப்பார் என்ற இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறைத் துணை அமைச்சரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், யுத்தத்தின் போதும் பிறகும் தமிழர்களுக்கு எதிராக நடந்த மோசமான குற்றங்களை விசாரித்து, வழக்குத் தொடுப்பதற்குத் தற்போதைய அரசாங்கத்துக்கு அரசியல் உறுதிப்பாடு இல்லை.

வெளிவிவகார அமைச்சர் தனது அறிக்கையில் தென்னாப்பிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் பற்றிப் பேசியுள்ளார். 'சமரசம் என்பது கொடூரமான கடந்தகாலத்தைப் புறக்கணிக்கும் ஒரு விடயம் அல்ல' என்று குடியரசுத் தலைவர் ஒபாமா நெல்சன் மண்டேலாவுக்கான தனது புகழுரையில் குறிப்பிட்டார்.

முரண்பாடு தீர்க்கப்படாமல் இருந்துவருகிற போது, சமரசம் என்பது அடையப்பட முடியாது. இலங்கைத் தீவில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள வேளையில், இன முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை.

இவ்விதமாக உண்மை மற்றும் சமரச ஆணையம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிதல் ஒரு திசைதிருப்பும் செயல்தந்திரம் தவிர வேறு எதுவுமல்ல.

போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான் குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், இலங்கையில் தற்போதைய சூழ்நிலை, ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ், 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது.

ஆகவே,இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்நிறுத்த, அல்லது ஐ.நா.சாசனத்தின் பிரிவு 22 இன் கீழ் ஒரு துணை அமைப்பாக ஒரு சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுமாறு ஐ.நா.பொதுப்பேரவைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்யக் கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கத்தைத் முன்னெடுக்கின்றது.

2009 ஆம் ஆண்டு போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிய ஐ.நா.அமைப்புமுறை மீண்டும் ஒருமுறை அந்தத் தவறைச் செய்யக் கூடாது.

இரண்டாவது உலகப் போரின் போது இனப்படுகொலைத் தாக்குதலைச் செய்தவர்கள் இன்றும்கூடத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணைக்குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

எந்த வகையிலும் நீதி மறுக்கப்பட்டுவிடக் கூடாது என்ற உலகின் எதிர்ப்பார்ப்பையும் பிரதிபலிப்பையும் இது காட்டுகிறது' என வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களது கருத்தினை குறித்துரைத்து அறிக்கை முன்வைத்துள்ளது.
« PREV
NEXT »