இலங்கையின் அரசியல் மீண்டும் ஒரு பதற்ற நிலைக்கு வந்துவிட்டது. தேசிய அரசு என காட்டப்பட்ட அரசு ஸ்திரமற்ற அரசா? என்பது இன்னும் சில நாட்களில் வெளிப்படும் என்று அரசியல் அவதானிகள் கருத்துக் கூறுகின்றனர்.
யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசியல் மறுபிரவேசத்தை தொடங்கிவிட்டார்.
அவரை மீண்டும் அரசியலுக்கு இழுக்க வாசுதேவ போன்றவர்களும் சில சுதந்திரக் கட்சியனரும் முயன்று வருகின்றனர்.
கடந்த ஜனவரி எட்டாம் திகதி தேர்தலில் தோல்வியை தழுவிய மகிந்த ராஜபக்ச தோல்வியின் முகத்துடன் ஜனாதிபதி மாளிகையைவிட்டு வெளியேறினார்..
அவரது வெளியேற்றத்தை தோல்விக்காட்சியாக ஊடகங்கள் காண்பித்தன. அத்துடன் அன்றைய நாளே தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கு தமிழர்கள் தன்னை தோற்கடித்தாக கூறினார்.
இவ்வாறான காட்சிகளின் ஊடாக மீண்டும் அரசியலுக்கு நுழையும் ஓரு தந்திரத்தை ராஜபக்ச மேற்கொண்டதாகவே தற்போது மதிப்பீடுகள் எழுகின்றன.
அரசியலில் இருந்து ஒதுங்குவதுபோல காட்டிக் கொண்ட மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒரு சில நாட்களிலேயே கொழும்பு கால்டன் இல்லத்தில் தனது மறு அரசியல் பிரவேசத்தை தொடக்கியுள்ளார்.
அவரை சிலர் அரசியலில் மீண்டும் இழுத்து விடுவதுபோல காட்டினாலும் உண்மையில் அவரே அரசியலில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார். அவரை யாரும் இழுக்கவில்லை என்றும் அவரால் அதிகாரமற்றிருக்க முடியாது என்றும் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்கிறார்.
மகிந்தவின் கால்டன் இல்லத்தில் தீவிர அரசியல் நடவடிக்கைகள் தொடர்வதாக மகிந்த ஆதரவு சுதந்திரக் கட்சி எம்பி ஒருவரது கருத்தை வைத்து எமது செய்தியாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். பிரதமர் வேட்பாளராக நிறுத்துக , இல்லை புதிய கட்சி அறிவிப்போம் என்று மகிந்த அணி மைத்திரிபாலவுக்கு எச்சரித்துள்ளது.
யுத்த வெற்றியையும் தமிழர்களால் தோற்கடிக்கப்பட்டதையும் கையில் எடுத்து மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றலாம் என மகிந்த ராஜபக்ச கணக்குப்போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மைத்திரி - சந்திரிக்கா அணியை உடைக்க அதுவே ஆயுதம் என மகிந்த கருதுவதாகவும் கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்றும் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருககப் போகிறார் என்றும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை இனங்கள் பெரும் துன்பங்களுக்கு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் என்று ஐ.தே.காவின் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிடுகிறார். அது மாபெரும் ஆபத்தாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றினால் அல்லது அவர் தலைமையில் அதிகாரத்தை கைப்பற்றினால் இந்த நாட்டில் என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்லி அறிய வேண்டியதில்லை என குறிப்பிடும் தமிழ் அரசியல் அவதானி ஒருவர் இது தமிழ் மக்களுக்கே நெருக்கடி தரும் காலம் என்றும் கூறுகிறார்.
நன்றி குளோபல் செய்திகள்
No comments
Post a Comment