Latest News

April 27, 2015

யாழில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை மறுப்பு! பயங்கரவாதியாக சித்தரிக்கும் பொலிஸார்
by admin - 0



யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் வைத்து கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.  

கடந்த 23ம் திகதி கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் நள்ளிரவு மேற்படி ஊடகவியலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டை உடைத்த பொலிஸார் குறித்த நால்வரையும் கைது செய்து மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். 

இந்நிலையில் 27ம் திகதி வரையில் நால்வருக்கும் நீதிபதி பொ.சிவகுமார் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதற்கமைய இன்றைய தினம் மேற்படி நால்வரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கும் பிணை வழங்க ஒப்புதல் தெரிவித்த பொலிஸார், ஊடகவியலாளருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். 

இதற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, குறித்த ஊடகவியலாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எனவும் அவர் தற்போதும் நோர்வே மற்றும் சில நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுவதாகவும் அதற்காக மேலதிகமாக விசாரணை செய்யவுள்ளதாகவும் இதன் படி விசாரணை முடிந்ததும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவிடம் வழக்கு கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் ஊடகவியலாரை விசாரிப்பதற்கு கால அவகாசத்தையும் கோரியிருக்கின்றனர். 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக விசாரித்த நீதிபதி, ஊடகவியலாளர் முன்னதாகவே அரசாங்கத்தினால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வெளிநாட்டிலுள்ள புலிகள் அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணியமை தொடர்பாக உறுதிப்படுத்துமாறும், அதற்கு முன்னதாக ஊடகவியலாளர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தமைக்காக புனர்வாழ்வு வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

மேலும், ஊடகவியலாளரை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.


மேலும் தற்போது வட பகுதியில் உள்ள ஊடகவியலாளர்களை ஓரங்கட்டும் நிகழ்ச்சி நிரலின் ஒரு விடயமாகவும் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் திட்டமாக பார்ப்பதாக சக ஊடக நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

« PREV
NEXT »

No comments