Latest News

April 27, 2015

மரணத்தை முத்தமிட சில மணி நேரங்களே, சிறைக்குள் காதலியை மணந்த கைதி.
by admin - 0

மரணத்தை முத்தமிட சில மணி நேரங்களே, சிறைக்குள் காதலியை மணந்த கைதி.
‘தோளில் மாலை மாலையில்-தூக்கு மேடை காலையில்’ இது 1985-ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் சினிமாவின் பாடல் வரியாக சிலருக்கு தோன்றலாம். ஆனால், இப்படி ஒரு உண்மை சம்பவம் தற்போது ஒரு மரண தண்டனை கைதி வாழ்க்கையின் கடைசி சில மணி நேர அனுபவமாக அமைந்துள்ளது.
இந்தோனேசிய சிறைக்குள் மரண தண்டனை நிறைவேற்ற இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைதிகளில் ஒருவரான ஆண்ட்ரூ சான் தனது இறுதி ஆசைப்படி நீண்டநாள் தோழியான இந்தோனேசிய இளம்பெண்ணை இன்று திருமணம் செய்து கொண்டார்.
இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்த மேலும் 8 பேரும் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்களின் நாட்டு தூதரகங்களும் தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தன.
குறிப்பாக, குற்றவாளிகள் ஆன்ட்ரூ சான், மயூரன் சுகுமாரனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு குரல் கொடுத்தது. அதை இந்தோனேசிய அரசு நிராகரித்தது. போதைப் பொருள் கடத்தலால் நாட்டில் குற்றங்கள் பெருகி கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ஜோகோ விடோடோ தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து இவர்கள் 10 பேருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் நுசாகம்பங்கன் தீவில் உள்ள பாதுகாப்பு மிக்க சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மரண தண்டனை நிறைவேற்ற இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், கைதிகளில் ஒருவரான ஆண்ட்ரூ சான் தனது கடைசி ஆசைப்படி நீண்டநாள் தோழியான ஃபெப்யாண்ட்டி என்ற இந்தோனேசிய இளம்பெண்ணை இன்று திருமணம் செய்து கொண்டார்.
மிகவும் நெருங்கிய குடும்ப உறவினர்கள் முன்னிலையில் சிறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திருமணத்துக்கு சாட்சியாக இருந்து ஆசீர்வாதம் செய்த ஆண்ட்ரூ சானின் சகோதரர், ‘இது மிகவும் இக்கட்டான நேரம். இடையில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் நடந்தேறியுள்ளது.
இந்தோனேசிய அதிபர் எப்படியாவது மனமிறங்கி என் சகோதரை மன்னித்து விடுதலை செய்வார். அவரை புது மனைவியுடன் வாழ அனுமதிப்பார் என்று நான் இன்னும்கூட நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மற்றொரு கைதியான மயூரன் சுகுமாறன் தனது இறுதி நிமிடங்களை ஓவியம் வரைவதில் செலவிட்டு வருகிறார். நேற்று இவரது பெற்றோர் சிறையில் மயூரனை சந்தித்து பேசினர்.
இவர்களின் மரண தண்டனையை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று ஆஸ்திரேலியா நினைக்கிறது. அதற்கேற்ப மரண தண்டனையை நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியாவுடன் இணைந்து உரிய தீர்வு காண வேண்டும் என்று இந்தோனேசியாவிடம் பிரான்சு வலியுறுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments