![]() |
விவசாயி |
அம்பாறை மாவட்டத்தில் காணியை இழந்த முஸ்லிம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பதில் காணிகளுக்கு காணி உறுதி வழங்குமாறு அக்கரைப்பற்று நுரைச்சோலை விவசாயிகள் அமைப்பு மகஜர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான கடிதங்கள் அமைப்பின் நிர்வாகிகளால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, விவசாய நீர்ப்பாசன பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அக்கரைப்பற்று மக்கள் வரலாற்றுக் காலம் தொடக்கம் விவசாயத்தை ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பங்களைப் பாதுகாக்க இம்மக்கள் மிகவும் கஷ்டப்பட்டவர்கள். 1932க்கு முன்னரே நெற்செய்கை விவசாயத்தை பிரதேசத்தில் மேற்கொண்டுவந்த மக்கள், சனத்தொகைப் பரம்பலுக்கு ஏற்ப நீத்தை, சிறு நீத்தை, மேலாமரத்துவெளி, அம்பலம் ஓயா, நுரைச்சோலை ஆகிய பிரதேசங்களில் தொழிலை விஸ்தரித்தனர். இவ்வாறான நிலையில் 1965ஆம் ஆண்டு கரும்புச் செய்கைக்காக உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமலும், பதில் காணி மற்றும் நஷ்டஈடு என எதுவுமே வழங்கப்படாமலும் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட 576 விவசாயிகள் நடுத்தெருவில் கைவிடப்பட்டனர்.
அப்போதைய அமைச்சர் எம்.எச்.முகம்மது ஊடாக அமைச்சர் காமினி திஸாநாயக்கவிடம் இவர்களது பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதன் விளைவாக 1985.12.13 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்திக் கூட்டத்தில் பதில் காணியாக புதிய காணி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் பிரகாரம் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் காணிகள் வழங்க சிபாரிசு செய்யப்பட்டு இடம்பெற்ற காணிக் கச்சேரியில் 277 விவசாயிகள் பதில் காணிகளை பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறு பெறப்பட்ட பதில் காணியில் 1989ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை நெற் செய்கை பண்ணப்பட்டு வந்தது. பின்னர் கரும்புச் செய்கைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். குறித்த காணிகளின் தகுதிகாலம் நிறைவடைந்ததும், எல்.டீ.ஓ. உத்தரவுப் பத்திரமும், பின்னர் உறுதியும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், எல்.டீ.ஓ. உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், உறுதிப் பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் கரும்புச்செய்கையின் மூலம் நாம் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் எதிர்கொண்டு வருகின்றோம். கரும்புச் செய்கையை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்கும் போது 5000 ஹெக்டயரில் பெறக்கூடிய விளைச்சலை 3000 ஹெக்டயரில் பெறக் கூடியதாயிருக்கும். மீதி 2000 ஹெக்டயர் நிலத்தில் நெற்செய்கையை மேற்கொண்டு நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும். ‘நாட்டுக்குத் தேவையான சீனியை நம் நாட்டில் உற்பத்தி செய்வோம்’ எனும் கோஷத்தின் மூலம் எமது வாழ்வு சீரழிக்கப்பட்டுவருகின்றது. இதனைக் கருத்திற்கொண்டும், ஏழை விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டும் ஆணைக்குழுவொன்றை அமைத்து உண்மை நிலையைக் கண்டறிவதுடன், விவசாயிகள் சுயாதீனமாக விரும்பிய பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கும் ஆவன செய்ய வேண்டும். அத்துடன், இக்காணிகளுக்கான உறுதிகளை வழங்கி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Social Buttons