ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தலைமையிலான ஆட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்தவரும் அவரது நம்பிக்கைக்குரிய முக்கிய கூட்டாளியுமான இஸ்ஸத் இப்ராஹிம் அல்-டவ்ரி என்பவர் திக்ரித் நகரின் அருகே இன்று கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சதாம் உசேன் அமெரிக்க படைகளிடம் பிடிபட்ட பின்னர் தலைமறைவாகிவிட்ட இஸ்ஸத் இப்ராஹிம் அல்-டவ்ரி இறந்து விட்டதாகவே இதுவரை கருதப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாக வாழக்கூடும். சதாமின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து ஈராக்கில் பாத் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அவர் வழிவகுக்கக் கூடும் என நினைத்த அமெரிக்க அரசு அவரது தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவித்து, தேடப்படும் தீவிரவாதியாக அவரை அறிவித்திருந்தது.
இந்நிலையில், சதாம் உசேன் பிறந்த இடமான திக்ரித் நகரின் வடகிழக்கு பகுதியில் மறைந்திருந்த இஸ்ஸத் இப்ராஹிம் அல்-டவ்ரி ராணுவ தாக்குதலில் இன்று கொல்லப்பட்டதாக சலாஹுதீன் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார் என ஈராக்கின் பிரதான தொலைக்காட்சியான அல்-அராபியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இறந்த இஸ்ஸத் இப்ராஹிம் அல்-டவ்ரின் உடலும் அந்த செய்தியில் காட்டப்பட்டு வருகின்றது.
ஈராக்கில் தலைமறைவாக இருந்து செயல்பட்டுவரும் ஜிஹாதிகளுக்கு இஸ்ஸத் இப்ராஹிம் அல்-டவ்ரியின் மறைவு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுவதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments
Post a Comment