செம்மரம் வெட்டியதாக கூறி தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேரை ஆந்திரா போலீசார் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திராவில் செம்மரம் வெட்டுகிறார்கள் என்று கூறி நூற்றுக்கணக்கானோரை ஆந்திரா போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் தமிழக தொழிலாளர்கள் 200 பேர் செம்மரம் வெட்டுவதாக கூறி டிஐஜி காந்தராவ் தலைமையிலான செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று காலை தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்போது தமிழக தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலியானோர் தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழக- ஆந்திரா எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Social Buttons