Latest News

April 01, 2015

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு - மன்மோகன் சிங்குக்கு நீதிமன்ற அழைப்பாணைக்கு இடைக்காலத் தடை
by Unknown - 0


நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விசாரணை நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணைக்கு இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

இந்தியாவில் பல நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த முடிவின் அடிப்படையில் நடந்த ஒதுக்கீடுகளில் இந்திய அரசுக்கு சுமார் 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று இந்திய தலைமைக் கணக்காயர் அறிக்கை ஒன்று கூறியதை அடுத்து இது குறித்து மத்திய புலனாய்வு நிறுவனம் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இதில் அப்போது நிலக்கரித் துறை அமைச்சர் பொறுப்பையும் ஒரு காலகட்டத்தில் வகித்த அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பாணை அனுப்பியது.

இதை எதிர்த்து மன்மோகன் சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கிலேயே இன்று இந்திய உச்சநீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை வழங்கியிருக்கிறது.
« PREV
NEXT »