Latest News

April 27, 2015

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு!.
by Unknown - 0

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கின் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை (30-04-2015), மதியம் 13.30 மணிக்கு. 'டென் காக்' உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நெதர்லாந்தில் முக்கிய ஐந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கானது 'டென் காக்' உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

இவ்வழக்கில், நெதர்லாந்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர், தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெதர்லாந்துக் கிளைப் பொறுப்பாளர் என்பதை தெரிவித்திருந்தார்.

மேலும், 

ஈழத்தில் தமீழீழ விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்டது பயங்கரவாதம் இல்லை, 

அது சிங்கள அரசின் அடக்குமுறைக்குள்ளும் இனஅழிப்புக்குள்ளும் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம், 

தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகள்,

விடுதலைப் புலிகளை ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத தடைப் பட்டியலில் இட்டது தவறு,

நெதர்லாந்தில் தமிழ் மக்களிடத்தில் சேர்க்கப்பட்ட நிதியின் பெரும்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கே சேர்க்கப்பட்டது,

என்று மக்கள் முன்னிலையில் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக நடந்த தனது விசாரணையில் முக்கியமாக தெரிவித்து பல ஆதாரங்களையும் நீதிமன்றில் கொடுத்திருந்தார்.

அத்துடன், சிறுவர் போராளிகள் விடயமாக விடுதலைப் புலிகள் அமைப்பானது யுனிசெப்புடன் இணைந்து முழுஒத்துழைப்பும் செய்திருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் செய்திகளையும் மேலும், அண்மையில் வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தீர்மானத்தையும் நீதிபதிகளிடம் 16.04.2015  அன்று நடந்த இறுதி அமர்வில் சமர்ப்பித்திருந்தார்.

இதனால், இந்நீதிமன்றத்தின் தீர்ப்பில் என்ன நடைபெறப் போகிறது என்பது பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், சர்வதேச குற்றவியல் நீதிபதிகள் என்பதால், இத் தீர்ப்பானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளில் இனிமேல் நடைபெறப் போகும் வழக்குகளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பானது எதிர்வரும்  வியாழக்கிழமை (30.04.2015) மதியம் 13.30 மணிக்கு 'டென் காக்' உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது மக்கள் மற்றும் செய்தியாளர்கள் சமுகமளிக்கலாம்.

நீதிமன்றின் முகவரி: 
Prins Clauslaan 60, 
2595 AJ Den Haag. 
« PREV
NEXT »

No comments